ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்கு பயணிக்கவில்லை - பிரபல விஞ்ஞானி பரபரப்பு பேட்டி
ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்கு பயணிக்கவில்லை என்று பிரபல விஞ்ஞானி நீல் டி கிராஸ் டைசன் கூறுகிறார்.
ரிச்சர்ட் பிரான்சன் (Richard Branson) சில நாட்களுக்கு முன்பு விண்வெளிக்குச் சென்று வந்த முதல் கோடீஸ்வரரானார்.
இந்த நிலையில் இப்போது, பிரபல வானியற்பியலாளரும் அறிவியல் தொடர்பாளருமான நீல் டி கிராஸ் டைசன் (Neil deGrasse Tyson), பிரான்சன் பறந்த இடத்தை நாம் விண்வெளி என அழைக்க முடியுமா என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
[YWC3OG ]
கிராஸ் டைசன் நியூயார்க்கில் உள்ள Rose Center for Earth and Space கோளரங்கத்தின் இயக்குநராக உள்ளார். CNN உடனான சமீபத்திய பேட்டியில், டி கிராஸ் டைசன்- ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்கு செல்லவில்லை என்று கூறினார்.
இது குறித்து அவர் விளக்கும்போது, “முதலில், அவர் சென்றடைந்த இடம் துணை சுற்றுவட்டப் பாதை (suborbital) ஆகும். நாசா 60 ஆண்டுகளுக்கு முன்பே ஆலன் ஷெப்பர்டு (Alan Shepard) மூலமாக அதைச் செய்துவிட்டது" என்கிறார்.
அவர் சில கேள்விகளை எழுப்பினார், “அப்படியானால், நீங்கள் போதுமான அளவு உயரத்திற்கு சென்றீர்களா? நீங்கள் சுற்றுப்பாதையில் சென்றீர்களா? நீங்கள் உண்மையில் எங்காவது சென்றீர்களா? நீங்கள் சந்திரனுக்கு, செவ்வாய் கிரகத்திற்கு அல்லது அதற்கு அப்பால் சென்றீர்களா?” என கேள்விகளை அடுக்கினார்.
அவர் என்ன சொல்கிறார் என்பதைக் காட்ட ஒரு உலக உருண்டையை (Globe) பயன்படுத்தினார். இந்த உலக உருண்டையை வைத்து கணக்கிட்டால், சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் ஒரு விண்கல சுற்றுப்பாதை பூமியிலிருந்து 1 செ.மீ தொலைவில் இருக்கும் என்றும், சந்திரன் 10 மீட்டர் தொலைவில் இருக்கும் என்றும் விளக்கினார்.
இந்த அளவின்படி ஒப்பிட்டால், ரிச்சர்ட் பிரான்சன் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 2 மில்லிமீற்றர் தூரத்திற்குத்தான் சென்று வந்துள்ளார் என்று கூறுகிறார்.
“நீங்கள் இதை 'விண்வெளி' என்று அழைக்க விரும்பினால் பரவாயில்லை, ஏனென்றால் சராசரி மனிதர்கள் இதற்கு முன்பு அங்கு வரவில்லை, இது உங்களுக்கு முதல் விஷயம். அதனால்தான் சுற்றுப்பாதைக்கு செல்ல 8 நிமிடங்கள் மற்றும் சந்திரனை அடைய 3 நாட்கள் ஆகும். அதுவே உண்மையில் விண்வெளி பயணம்.
அதற்காக நான் இதை விண்வெளி பயணம் என்று பார்க்கவில்லை என்று அர்த்தம் இல்லை. அங்கிருந்து பார்த்தால் பூமியை சற்று நன்றாக பார்க்கலாம் அவ்வளவு தான். இந்த தூரத்திலிருந்து பார்த்தால் பூமியின் வட்டத்தைக்கூட முழுமையாக பார்க்கமுடியுமா என தெரியவில்லை." என்றார்.
எது எப்படியிருந்தாலும், பிரான்சன் முதல் விண்வெளி சுற்றுலா விமானபயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார். அடுத்த வாரம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos ) இந்த சாதனையை பிரதிபலிக்க உள்ளார்.