உலகிலேயே செல்வம் கொழிக்கும் தெரு... ஆனால் அங்கு வாழும் புலம்பெயர்ந்தோர் நிலை?
உலகிலேயே செல்வம் கொழிக்கும் தெரு என அழைக்கப்படுகிறது, பிரெஞ்சு நகரம் ஒன்றில் அமைந்துள்ள ஒரு தெரு.
ஆனால், அங்கு தெருக்களில் மோசமான நிலையில் வாழ்கிறார்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர்!
உலகிலேயே செல்வம் கொழிக்கும் தெரு...
வட பிரான்சிலுள்ளது Épernay என்னும் நகரம். அங்குள்ள ஒரு தெரு, உலகிலேயே செல்வம் கொழிக்கும் தெரு அல்லது பணக்கார தெரு என அழைக்கப்படுகிறது.
அதற்குக் காரணம், உலகிலேயே அதிக விலைமதிப்புள்ள ஷாம்பெயின் என்னும் உயர் ரக மதுபானம் சேகரித்துவைக்கப்படும் இடம் அங்குதான் உள்ளது.
வட பிரான்சிலுள்ள திராட்சைத் தோட்டங்களிலிருந்து கடந்த ஆண்டில் மட்டும் 300 மில்லியன் ஷாம்பெயின் போத்தல்கள் உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
அதனால் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைத்த வருவாய், ஆறு பில்லியன் யூரோக்கள்!
புலம்பெயர்ந்தோர் நிலை?
அதே பணக்கார தெருவில், இரவில், திரையரங்கம் ஒன்றின் முன் படுத்துக் கிடக்கிறார்கள் அந்த திராட்சைத் தோட்டங்களில் வேலை செய்யும் புலம்பெயர்ந்தோர்.
ஆம், அவர்களுக்கு தங்க இடம் எதுவும் அளிக்கவில்லை அவர்களுக்கு வேலை கொடுத்துள்ளவர்கள்.
நல்ல சம்பளம் மற்றும் போனஸ் கொடுப்பதாக ஏமாற்றப்பட்டு இந்த திராட்சைத் தோட்டங்களுக்கு வேலைக்கு அழைத்துவரப்படுகிறார்கள் புலம்பெயர்ந்தோர்.
பிரான்சில் குறைந்தபட்ச ஊதியம், ஒரு மணி நேரத்துக்கு 9. 23 யூரோக்கள். நாளொன்றிற்கு ஆக, அவர்களுக்கு சுமார் 100 முதல் 110 யூரோக்கள் சம்பளம் கொடுக்கப்படவேண்டும்.
ஆனால், அவர்களில் சிலர் ஒரு வாரத்துக்கே 200 யூரோக்கள்தான் சம்பளம் பெறுகிறார்கள்.
சரியான உணவு இல்லாததால் சிலர் பட்டினி கிடக்க, சிலர் திருடியாவது சாப்பிடலாம் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அவர்களை வேலைக்கு வைத்துள்ள மதுபான தயாரிப்பு நிறுவனங்களோ, தாங்கள் குறைவான சம்பளமே கொடுத்தாலும், தாங்கள் புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதாக நியாயம் பேசுகின்றன.
ஊடகங்களின் உதவியால் இந்த விடயங்கள் தற்போது வெளிவரும் நிலையில், ஒரு திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யும் புலம்பெயர்ந்தோரில் நான்கு பேர் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பால் உயிரிழக்க, சம்பந்தப்பட்ட திராட்சைத் தோட்ட உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது ஆட்கடத்தல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர்கள் விரைவில் நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், புலம்பெயர்ந்தோர் பசி பட்டினியுடன் தெருக்களில் வாழும் நிலையும், ஆளைவிட்டால் போதும் என பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமலே வேறு வேலைகளைத் தேடப்போகும் நிலையும் தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |