ரூ 77,000 கோடி சொத்து மதிப்பு... நாட்டின் பணக்கார பெண்களில் ஒருவர்: ரத்தன் டாடாவுடன் நெருங்கிய தொடர்பு
மறைந்த தொழில் அதிபர் சைரஸ் மிஸ்திரியின் மனைவியான ரோஹிகா மிஸ்திரி இந்தியாவில் அறியப்படும் ஒரு கார்ப்பரேட் ஐகான் ஆவார்.
செல்வாக்கு மிக்க குடும்பம்
இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவராக வலம் வரும் இவர் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை மூத்த வழக்கறிஞர் இக்பால் சாக்லா மற்றும் அவரது தாயார் ரோஷன் சாக்லா.
மட்டுமின்றி இவர் சட்ட மேதை எம்.சி. சாக்லாவின் பேத்தி ஆவார். ரோஹிகாவின் சகோதரர் ரியாஸ் சாக்லா, 2017 இல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ரோஹிகா சாக்லா 1992ல் சைரஸ் மிஸ்திரியை மணந்தார். இந்த தம்பதிக்கு ஃபிரோஸ் மிஸ்திரி மற்றும் ஜஹான் மிஸ்திரி என இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் சைரஸ் மிஸ்திரி, இந்தியாவில் பிறந்த ஐரிஷ் பில்லியனர் தொழிலதிபர் ஆவார், அவர் டாடா குழுமத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
சைரஸ் மிஸ்திரி 2022 ஆம் ஆண்டு தனது 54 வயதில் ஒரு கார் விபத்தில் பரிதாபமாக இறந்தார். 2022ல் மறைந்த கட்டுமான நிறுவனங்களின் தலைவரான பல்லோன்ஜி மிஸ்திரியின் இளைய மகன்.
ரோஹிகா மிஸ்திரியின் கணவர் சைரஸ் மிஸ்திரியின் அகால மரணத்திற்குப் பிறகு அவரது சொத்துக்கள் மற்றும் குடும்ப சொத்தில் 18.4 சதவீத பங்குகளையும் ரோஹிகா மிஸ்திரி மரபுரிமையாகப் பெற்றுள்ளார்.
வெளியான தரவுகளின் அடிப்படையில் தற்போது ரோஹிகா மிஸ்திரியின் சொத்து மதிப்பு ரூ 56,000 முதல் 77,000 கோடியாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது. 2023ல் ரோஹிகாவின் சொத்து மதிப்பு 7 பில்லியன் டொலர் என்றே கூறப்பட்டது.
விரிசலும் சட்ட மோதல்களும்
ரோஹிகா மிஸ்திரி டாடா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். தொழில் ரீதியாக, அவரது கணவர் டாடா குழுமத்தின் தலைவராக பணியாற்றினார். இருப்பினும், சைரஸ் மிஸ்திரி 2016 இல் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இது டாடா குடும்பத்திற்கும் மிஸ்திரி குடும்பத்திற்கும் இடையே விரிசலுக்கும், பல சட்ட மோதல்களுக்கும் வழிவகுத்தது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர்களில் மிஸ்திரி குடும்பமும் ஒன்றாகும்.
சைரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதிலும், மிஸ்திரி குடும்பம் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18.4% பங்குகளைத் தக்க வைத்துக் கொண்டது.
இரு குடும்பத்திற்கும் இடையே விரிசலும், பல சட்ட மோதல்களும் இருந்தும் சைரஸ் மிஸ்திரியின் சகோதரி ஆலு மிஸ்திரி, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரரான நோயல் டாடாவை மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |