விராட் கோலி பற்றிய ரகசியங்களை முன்பே தெரிந்து கொண்ட ரிக்கி பாண்டிங் - எப்படி தெரியுமா?
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவது தனக்கு கடந்த ஆண்டே தெரியும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
இந்திய அணியின் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
விராட் கோலியின் பதவி விலகல் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை கூறிவரும் வேளையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது விராட் கோலி பதவி விலகுவது குறித்து என்னிடம் வந்து பேசினார். அப்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து தான் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து கேப்டனாக இருக்க விரும்புகிறேன் என்று கூறியதாக பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மேலும் விராட் கோலி இந்திய அணியை மிகவும் நேசித்தார். அவர் மைதானத்தில் விளையாடுவதை ஒரு மணி நேரம் பார்த்தாலே அவர் கிரிக்கெட் மீது எவ்வளவு ஆர்வம் வைத்திருக்கிறார் என்பது நமக்கு புரிந்துவிடும். இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. ஏனெனில் இந்தியர்கள் அனைவரும் கிரிக்கெட்டை உயிர் போன்று நேசிக்கின்றனர்.
விராட் கோலி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். அவர் கேப்டன் பதவியிலிருந்து வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தாலும், பல சாதனைகளைப் படைத்த பிறகே வெளியேறியுள்ளதாக பாண்டிங் கூறியுள்ளார்.