ஊடகவியலாளர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டிய பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர்: எழுந்துள்ள கடும் கண்டனம்
பிரான்சில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒருவர் ஊடகவியலாளர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டிய சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஊடகவியலாளர்கள் மீது கடுமையான வெறுப்பு கொண்டவரான Eric Zemmour (63), அடுத்து நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருவார் என்ற ஒரு கணிப்பு உள்ளது. இந்நிலையில், நேற்று பாரீஸில் நடைபெற்ற ஆயுதக் கண்காட்சி ஒன்றிற்கு சென்றிருந்த Zemmour, துப்பாக்கி ஒன்றை எடுத்து ஆய்வு செய்துகொண்டிருந்தார்.
அப்போது தன்னிடம் கேள்விகள் கேட்ட ஊடகவியலாளர்களை நோக்கி துப்பாக்கியைத் திருப்பிய அவர், என்ன ஜோக்கடிக்கிறீர்களா? பின்னால் செல்லுங்கள் என்றார்.
இந்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஒரு ஆயுதத்தை ஒருவர் ஆய்வு செய்யும்போது, இரண்டு விதிகளைப் பின்பற்றவேண்டும். ஒன்று, துப்பாக்கி ஒன்றைக் கையில் எடுத்தால், அதில் குண்டுகள் இருப்பதாகவே கருதவேண்டும். இரண்டு, தான் அழிக்க விரும்பாத ஒரு பொருளை நோக்கி துப்பாக்கியை குறிவைக்கக்கூடாது.
En visite au salon Milipol, Éric Zemmour pose avec le sniper utilisé par le Raid. « Ça rigole plus là hein…Reculez ! », dit-il à la presse pic.twitter.com/oXKsGlZ4qG
— Lucas Burel (@L_heguiaphal) October 20, 2021
ஆனால், Zemmour இந்த விதிகள் எதையும் குறித்துக் கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை.
இதற்கிடையில், அவரது பொறுப்பற்ற செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. பிரான்ஸ் குடியுரிமை அமைச்சரான Marlène Schiappa, ஊடகவியலாளர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டி, பின்னால் போங்கள் என்று கூறுவது வேடிக்கையானது அல்ல என்று கூறியுள்ளார்.
தான் ஊடகங்களின் வலிமையை குறைக்க விரும்புவதாக வெளிப்படையாக கூறும் ஒருவர், இப்படி செய்வது அச்சமூட்டும் ஒரு செயலாகும் என்று கூறியுள்ள Marlène, மக்களாட்சி நடக்கும் ஒரு நாட்டில் ஊடக சுதந்திரம் வேடிக்கை அல்ல, அது அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், Eric Zemmour இதுவரை தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கவில்லைதான். ஆனால், பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வலது சாரியினரிடையே அவருக்கு பெரிய ஆதரவு இருப்பதைக் காட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.