ட்ரம்பின் அமைதி வாரியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கனடா: பெருகும் ஆதரவு
அமெரிக்க ஜனாதிபதியின் அமைதி வாரியத்தில் சேருவதற்கான அழைப்பை பிரதமர் மார்க் கார்னிக்கு வழங்கியிருந்ததை டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ள முடிவை கனடிய மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன.
நிம்மதியான விடயம்
கனடா ஒரு காலனித்துவத் திட்டத்தில் பங்கேற்பது முறையல்ல என்றும் அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. கனடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் தெரிவிக்கையில்,

ட்ரம்ப்பின் தலைமையிலான அந்த வாரியத்தில் கனடாவுக்கு இனி இடமில்லை என்பது ஒரு நிம்மதியான விடயம் என குறிப்பிட்டுள்ளது. மேலும், காஸாவில் பெரும் போர்க்குற்றங்களும் மனிதாபிமானப் பேரழிவும் நிகழும் இந்த நேரத்தில், கனடா சர்வதேசச் சட்டத்திற்கும் மனித உரிமைகளுக்கும் இணங்கி நடக்க முயற்சிக்க வேண்டும் என அந்த கவுன்சில் தங்களது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த வாரியம் பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமையை கேலிக்குள்ளாக்குகிறது, மேலும் கனடாவுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை CJPME அமைப்பு தெரிவிக்கையில், கார்னியின் பங்கேற்பு, அந்த வாரியத்திற்குத் தகுதியற்ற ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்திருக்கும். ட்ரம்ப்பின் அதிகார அபகரிப்புக்கு கொள்கை ரீதியான எதிர்ப்பைக் காணவே கனடியர்கள் விரும்புகிறார்கள், மாறாக முரண்பட்ட செய்திகளை அல்ல என்றும் தங்களின் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.

இஸ்ரேல் ஆதரவாளர்களும்
முன்னதாக, இதுவரை இல்லாத மிகவும் மதிப்புமிக்க தலைவர்கள் குழு இணைந்துள்ள அமைதி வாரியத்தில், கார்னிக்கு சேருவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை வாபஸ் பெற்றதாக ட்ரம்ப் வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.
இந்த வாரியத்தின் முதன்மையான விழா ஒன்றை டாவோஸில் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே, பிரதமர் கார்னிக்கான அழைப்பு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

காஸாவிற்கான அமைதி வாரியத்தில் கடும் இஸ்ரேல் ஆதரவாளர்களும் இடம்பெற்றுள்ளனர். காஸாவில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைதாணையை எதிர்கொண்டுள்ள இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்த வாரியத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |