வாணவேடிக்கை காட்டிய வீரர்! மிரண்டுபோன இங்கிலாந்து..மிரட்டலான வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கார்டிப்ஃபில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடந்தது. நாணய சுழற்சிக்கு வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் 15 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஹென்ரிக்ஸ் மற்றும் ரோஸோவ் அதிரடியில் மிரட்டினர். அணியின் ஸ்கோர் 112 ஆக உயர்ந்தபோது ஹென்ரிக்ஸ் 53 (32) ஓட்டங்களில் க்ளீசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ரோஸோவ் வாணவேடிக்கை காட்டினார்.
PC: Getty Images
சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்ட அவர் 55 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 96 ஓட்டங்கள் விளாசினார். அவரது அதிரடி ஆட்டத்தினால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்கள் குவித்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ராய் (20), பட்லர் (29) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். பின்னர் களமிறங்கிய மாலன் 5 ஓட்டங்களில் மகாராஜ் பந்துவீச்சில் வெளியேறினார். மொயீன் அலி அதிரடியாக 17 பந்துகளில் 28 ஓட்டங்களும், பேர்ஸ்டோவ் 21 பந்துகளில் 30 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 149 ஓட்டங்களில் ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி சௌதாம்டனில் 31ஆம் திகதி நடக்க உள்ளது. அதிரடியாக 96 ஓட்டங்கள் விளாசிய ரோஸோவ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
yahoo