பிரான்சில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு உயர்வு
பிரான்சிலும் பிரித்தானியாவிலும் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.
பிரித்தானியா ஒரே நாளில் 119,789 பேருக்கு கொரோனா தொற்று என அறிவிக்க, பிரான்சில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 90,000ஐத் தாண்டியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, பிரான்சில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 91,608. நேற்று இது குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Olivier Veran, இது மோசமான எண்ணிக்கை என்றார்.
அவர் வியாழக்கிழமை சுமார் 88,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்று முன்பு கூறியிருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 91,608 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
அதே நேரத்தில், விரைவில் பிரான்சில் நாளொன்றிற்கு 100,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகலாம் என அவர் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 179. தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை முந்தைய நாளில் 61 அதிகரித்து 3,208ஆகியுள்ளது.