இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கிய பந்த், பாண்ட்யா: இந்திய அணி அபார வெற்றி
மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், பேர்ஸ்டோ களமிறங்கினர்.
தொடக்கத்தில் சிராஜ் வீசிய ஓவரில் பேர்ஸ்டோ ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜோ ரூட் வந்த வேகத்தில் அதே ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்டினார்.
அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ், ராய் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். ஒரு புறம் ராய் அதிரடியாக ரன்கள் குவித்தார். அணியின் ஸ்கோர் 66 ஒட்டங்களாக இருந்த போது ராய் 41 ஓட்டங்களில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஸ்டோக்ஸ் 27 ஓட்டங்களில் வெளியேற 74 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோஸ் பட்லர், மொயீன் அலி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இருவரும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். மொயீன் அலி 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய கேப்டன் பட்லர் அரைசதம் அடித்தார். அவருடன் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்..
பட்லர் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் டேவிட் வில்லே(18), கிரேக் ஓவர்டன்(32) ஓட்டங்கள் எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 45.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 259 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் பாண்டியா 4 விக்கெட்டும், சிராஜ், சாஹல் தலா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 260 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களான அணித்தலைவர் ரோகித் சர்மா(17) தவான்(1) ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய கோஹ்லி 22 பந்துகளை எதிர்கொண்டு 17 ஓட்டங்களில் வெளியேறினார்.
சூர்யகுமார் யாதவ் 16 ஓட்டங்களில் வெளியேற ரிஷப் பந்த் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் நங்கூரமிட்டது போன்று இங்கிலாந்து பந்துவீச்சை நொறுக்கினர்.
பாண்டியா 55 பந்துகளை எதிர்கொண்டு 71 ஓட்டங்கள் குவித்து வெளியேறினர். இதனையடுத்து பந்துடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார்.
ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 113 பந்துகளில் 125 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
இறுதியில் 42.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 261 ஓட்டங்கள் குவித்து அபார வெற்றிபெற்றது.