பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்த பட்டியல் - ரிஷப் பண்ட் தக்கவைப்பு
பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்த பட்டியலில் விபத்தில் படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் வீர் ரிஷப் பண்ட் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்
கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தன் தாயாரைப் பார்க்க ரூர்க்கிக்குச் சென்று கொண்டிருந்த போது, ரிஷப் பண்ட் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரிஷப்பிற்கு கால் முட்டியில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கால் தசைநார் கிழிந்த இரு பகுதியை சரி செய்ய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இன்னும் அடுத்த 6 வாரத்தில் இன்னொரு தசைநார் கிழிவுக்கு ஆபரேஷன் செய்யப்பட உள்ளது.
இதனையடுத்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி செய்தியாளர்களிடம் பேசுகையில், விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கார் விபத்திலிருந்து மீண்டு வருவதால், டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஐபிஎல் 2023-ல் விளையாடமாட்டார். மேலும், ரிஷப் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவித்தார். இதனால், ரிஷப் பண்ட் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கினர்.
ரிஷப் பண்ட் தக்கவைப்பு
தற்போது பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அதில், வீரர்களின் திறமைக்கேற்ப ஏ+, ஏ, பி, சி என 4 பிரிவுகளில் வீரர்களை தரம் பிரித்து சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஏ + பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 7 கோடியும், ஏ பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், பி பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 3 கோடியும், சி பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 1 கோடியும் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இவ்வருட (அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை) வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி ஏ+ பிரிவில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, காயத்தால் ஓய்வில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா ஆகிய 4 பேர் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இதனையடுத்து, பிரிவு ஏ-வில் ஹர்த்திக் பாண்ட்யா, தமிழக வீரர் அஷ்வின், முகமது ஷமி, கார் விபத்தில் சிக்கி தற்போது கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல் ஆகிய 5 வீரர்கள் இடம்பிடித்திருக்கிறார்கள்.