வரி செலுத்திய தரவுகளை முதன்முறையாக வெளியிட்ட ரிஷி சுனக்: மொத்த சொத்துமதிப்பும் வெளியானது
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தனிப்பட்ட வரி அறிக்கையை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.
வருமான வரிக் கணக்கு
அதில், கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் 1,000,000 பவுண்டுகள் வரியாக செலுத்தியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், ஆதாய வரியாக 325,826 பவுண்டுகளும் வருமான வரியாக 120,604 பவுண்டுகளும் ரிஷி சுனக் செலுத்தியுள்ளார்.
பிரித்தானியாவிலேயே செல்வந்தரான நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷி சுனக், கடந்த ஆண்டு பிரதமர் வேட்பாளர் போட்டியின் போது தனது வருமான வரிக் கணக்கை வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்.
ஆனால், லிஸ் டிரஸ் அந்த போட்டியில் வெற்றிபெற்று பிரதமர் பொறுப்புக்கு வந்தார். மேலும், பிரித்தானியாவின் நிதியமைச்சராக பொறுப்பில் இருந்த போதும், அமெரிக்காவில் தமது சொத்துக்களுக்கான வருமான வரியை செலுத்தி வந்துள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அத்துடன், கடந்த 3 நிதியாண்டுகளில் பிரதமர் ரிஷி சுனக் மொத்தமாக 4.7 மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டியுள்ளார். 2021 மற்றும் 2022 நிதியாண்டுகளில் ரிஷி சுனக் 1.9 மில்லியன் பவுண்டுகள் வருவாயாகவும் ஆதாயமாகவும் ஈட்டியுள்ளார்.
@PA
சொத்துமதிப்பு 730 மில்லியன் பவுண்டுகள்
வருமான வரியாக ரிஷி சுனக் செலுத்தியுள்ள 432,493 பவுண்டுகள் என்பது, சராசரி பிரித்தானிய ஊதியத்தைவிடவும் 11 மடங்கு அதிகமாகும். தற்போது வெளியான தரவுகள் அனைத்தும் ரிஷி சுனக் பிரித்தானியாவில் செலுத்தியுள்ள வருமான வரி ஆகும், ஆனால் அமெரிக்காவில் இருந்து அவர் ஈட்டும் வருவாய் தொடர்பில் எந்த தகவலும் இல்லை.
பிரதமர் சுனக் மற்றும் அவரது மனைவியின் மொத்த சொத்துமதிப்பு என்பது 730 மில்லியன் பவுண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. பலமுறை தமது வருமான வரி தொடர்பில் தரவுகளை வெளியிடுவதில் இருந்து ரிஷி சுனக் தயக்கம் காட்டி வந்துள்ளார்.
மட்டுமின்றி, அப்படியான கேள்விகளையும் அவர் தவிர்த்து வந்தார். இந்த மாத தொடக்கத்தில், தொழிற்கட்சி எம்பி ரிச்சர்ட் பர்கோன், வருமான வரிக் கணக்கை வெளியிட பிரதமர் ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறார் என்று நாடாளுமன்றத்தில் முறையிட்டார்.
@getty
ஆனால் அதற்கு பதிலளித்த பிரதமர் ரிஷி சுனக், தற்போதைய அரசியல் சூழலில் பரபரப்பாக இயங்க வேண்டி இருக்கிறது எனவும், அதனாலையே தமது வருமான வரி தொடர்பிலான தரவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், பிரித்தானிய பிரதமர் ஒருவர் தமது வருமான வரி தரவுகளை வெளியிட வேண்டும் என்பது கட்டயமல்ல என்றே கூறப்படுகிரது.
அத்துடன், கடைசியாக 2016ல் டேவிட் கேமரூன் பிரதமராக இருந்த போது தான், தமது வருமான வரிக் கணக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.