அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதற்காக புலம்பெயர்ந்தோர் வயிற்றில் அடிக்கும் ரிஷி அரசு
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்காக, ரிஷி அரசு, புலம்பெயர்ந்தோரை பலிகடா ஆக்குவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
ஒருபக்கம் எத்தனையோ பேர் விலைவாசியால் குடும்பத்துக்கு உணவளிக்கக்கூட கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் நிலைமையில், இன்னொரு பக்கம் பொதுத்துறை ஊழியர்கள் பலர் ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தங்களில் இறங்குவது உலக நாடுகள் பலவற்றில் வழக்கமாகிவிட்டது.
பிரித்தானியா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? கோவிட் நேரத்திலும் மருத்துவமனை ஊழியர்கள், பொலிசார் முதலான பல்வேறு துறையினர் சளைக்காமல் பணி செய்ததை மறுக்க முடியாது. ஆனாலும், அவ்வப்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வேலை நிறுத்தங்களும், குறைந்தபட்சம் வேலைநிறுத்தம் செய்வோம் என அரசுக்கு மிரட்டல்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆக, பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது என முடிவு செய்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
பொலிசாருக்கு 7%, சிறப்பு மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் முதலானோருக்கு 6%, ஜூனியர் மருத்துவர்களுக்கு 6% ஊதிய உயர்வுடன் 1,250 பவுண்டுகள், சிறை அலுவலர்களுக்கு 7%, இராணுவத்தினருக்கு 5% ஊதிய உயர்வுடன் 1,000 பவுண்டுகள், ஆசிரியர்களுக்கு 6.5% ஊதிய உயர்வு அளிப்பது என ரிஷி முடிவு செய்துள்ளார்.
பலிகடா ஆன புலம்பெயர்ந்தோர்
ஆனால், இந்த பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுக்கு பணம் வேண்டுமே. அதற்காக பிரதமர் ரிஷி ஒரு திட்டம் வைத்திருக்கிறார், அது புலம்பெயர்ந்தோர் வயிற்றில் அடிப்பது!
ஆம், பிரித்தானிய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதற்காக, விசா கட்டணங்களை உயர்த்தவும், புலம்பெயர்ந்தோர் அரசு மருத்துவமனை வசதிகளைப் பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாக பிரதமர் ரிஷி அறிவித்துள்ளார்.
அகதிகள் ஆதரவு அமைப்பு குற்றச்சாட்டு
ரிஷியின் இந்த திட்டம், ஏற்கனவே விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்தோர் வயிற்றில் அடிப்பதாக உள்ளதாக Praxis என்னும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆதரவு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
விசா கட்டணங்கள் முதலானவை ஏற்கனவே மிக அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ள Praxis அமைப்பைச் சேர்ந்த Josephine Whitaker-Yilmaz, விசா புதுப்பித்தலுக்காக பல்லாயிரக்கணக்கான பவுண்டுகளை செலவிடவேண்டியுள்ளது என்றும், குறிப்பாக விலைவாசியும் அதிகமாக உள்ள இந்த காலகட்டத்தில் இந்த கட்டணங்களை செலுத்த புலம்பெயர்ந்தோர் திணறிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்படி தேவைகள் வரும்போதெல்லாம் வெளிநாட்டில் பிறந்தவர்கள் வயிற்றில் அடிப்பதை நிறுத்திவிட்டு,அரசு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும், அனைத்துக் குடும்பங்களுக்குமான தேவைகள் சந்திக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் Josephine.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |