மொத்தமாக 200 மில்லியன் பவுண்டுகள்... பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் - அக்ஷதா தம்பதி இழந்த தொகை
கடந்த 12 மாதங்களில் மட்டும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதாவின் சொத்து மதிப்பில் 200 மில்லியன் பவுண்டுகள் சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்கு மதிப்பு வீழ்ச்சி
பிரதமர் ரிஷி சுனக் - அக்ஷதா தம்பதியின் தற்போதைய சொத்து மதிப்பு 529 மில்லியன் பவுண்டுகள் என தெரியவந்துள்ளது. Sunday Times வெளியிட்ட செல்வந்தர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு 222வது இடத்தில் இருந்த இந்த தம்பதி, தற்போது 275வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
@AFP
ஒரே ஆண்டில் சுமார் 200 மில்லியன் பவுண்டுகள் இழப்பை சந்திக்க காரணமாக கூறப்படுவது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அவர்களின் பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்ததை குறிப்பிட்டுள்ளனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனமானது அக்ஷதாவின் தந்தையால் நிறுவப்பட்டதாகும். ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் அவரது ஆண்டு ஊதியமானது 165,000 பவுண்டுகள் என அதிகரித்தது. கடந்த அக்டோபரில் பிரதமர் பதவிக்கு வந்த பின்னர் அவரது வருவாய் அதிகரித்துள்ளது.
இருப்பினும், 730 மில்லியன் பவுண்டுகள் என இருந்த சொத்து மதிப்பு இந்த ஆண்டு 529 மில்லியன் என சரிவடைவதை அவரால் தவிர்க்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பானது தொடர் விமர்சனங்களுக்கு அடிக்கடி இலக்காகி வருகிறது. மட்டுமின்றி, சாதாரண பிரித்தானிய மக்களின் வாழ்வாதாரம் தொடர்பில் அவருக்கு புரிதல் இல்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை
பணவீக்கம் 10%க்கு மேல் உள்ளது. தொழிலாளர்களின் ஊதியம் குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கவில்லை என்றே குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், பணவீக்கத்தை பாதியாக குறைத்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் சுனக் உறுதியளித்துள்ளார்.
@PA
மேலும், வங்கியில் இருக்கும் சேமிப்பை வைத்து நாம் ஒருவரை எடைபோடுவதில்லை, அவர்களின் குணம் மற்றும் செயல்களை வைத்து அவர்களை மதிப்பிடுகிறோம் என ரிஷி சுனக் விளக்கமளித்துள்ளார்.