பிரதமர் ரிஷிக்கு கடும் எதிர்ப்பு: வெளிநாட்டவர்களுக்கு ஆதரவாக கைகோர்த்த அமைச்சர்களும் கல்வி நிறுவனங்களும்
புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவரும் ரிஷி சார்ந்த, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, பட்டதாரி விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, ரிஷிக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கும் ரிஷி
புலம்பெயர்தல் விடயத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி கடுமையான நிலைப்பாட்டைக் காட்டவில்லை என ஒரு தரப்பினர் குற்றம் சாட்டிவருவதால், பிரித்தானியாவுக்குள் பின் வாசல் வழியாக நுழைய உதவும் திட்டம் என கருதப்படும் பட்டதாரி விசா திட்டத்தை மேலும் கட்டுப்படுத்தவும், கூடுமானால், அத்திட்டத்தையே முடிவுக்குக் கொண்டுவரவும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், பட்டதாரி விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. அமைச்சர்கள் சிலரும், கல்வி நிறுவன உரிமையாளர்களும், ஏன் பிரித்தானிய மாணவர்களின் பெற்றோரும் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எந்தெந்த அமைச்சர்கள் எதிர்ப்பு?
குறிப்பாக கல்வித்துறைச் செயலரான Gillian Keegan, சேன்ஸலர் Jeremy Hunt மற்றும் வெளியுறவுச் செயலரான David Cameron ஆகியோர் ரிஷியின் திட்டத்தை எதிர்ப்பதாக அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
Photograph: Wiktor Szymanowicz/Future Publishing/Getty Images
கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு
பல்கலை துணைவேந்தர்கள் பலரும் ரிஷியின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், லண்டன் பல்கலைக் கல்லூரி முதல்வரான Dr Michael Spence, சர்வதேச மாணவர் விசாக்களை மேலும் கட்டுப்படுத்துதல், பிரித்தானியா தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வதுபோலாகிவிடும் என்கிறார்.
ஒரு முறை கல்லூரியில் சேரும் மாணவர்களால் பிரித்தானியாவுக்கு 37 பில்லியன் பவுண்டுகள் லாபம் கிடைக்கிறது, அது நேரடியாக உள்ளூர் வர்த்தகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்.
Photograph: Reuters
உள்ளூர் மாணவர்களின் பெற்றோரும் எதிர்ப்பு
ரிஷியின் திட்டத்துக்கு, உள்ளூர் மாணவர்களின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால், உள்ளூர் மாணவர்களைவிட சர்வதேச மாணவர்கள் பல மடங்கு அதிக கல்விக் கட்டணம் செலுத்துகிறார்கள்.
ஆக, சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால், உள்ளூர் மாணவர்களின் கல்விக்கட்டணம் அதிகரிக்கக்கூடும் என பிரித்தானிய மாணவர்களின் பெற்றோர் அஞ்சுகிறார்கள்.
ஆக, மொத்தத்தில், சர்வதேச மாணவர்களைக் கட்டுப்படுத்த விரும்பும் பிரித்தானிய பிரதமர் ரிஷியின் திட்டத்துக்கு எதிராக, அமைச்சர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் மாணவர்களின் பெற்றோரும் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |