பிரித்தானியாவின் 57வது பிரதமர்: நாட்டு மக்களுக்கு ரிஷி சுனக் அளித்த வாக்குறுதி
நாம் ஒன்றுபட வேண்டும் அல்லது வீழ்த்தப்படுவோம், நம் நாட்டுக்காக உழைக்க வேண்டிய தருணம் இது
நமது கட்சியையும் நாட்டையும் ஒன்றாக முன்னெடுத்துச் செல்வதற்கு நான் முன்னுரிமை அளிக்க இருக்கிறேன்.
நாட்டின் 57வது பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்கவிருக்கும் நிலையில், பிரித்தானியாவுக்காக இரவு பகல் பாராமல் உழைக்க தாம் தயார் என மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
பெரும்பாலான கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நாட்டின் 57வது பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்க உள்ளார். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தீப ஒளித் திருநாளை கொண்டாடிவரும் நிலையில், ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு தெரிவாகியுள்ளது உறுதியானது.
@reuters
இதனையடுத்து தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய ரிஷி சுனக், நாம் ஒன்றுபட வேண்டும் அல்லது வீழ்த்தப்படுவோம், நம் நாட்டுக்காக உழைக்க வேண்டிய தருணம் இது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரித்தானியா ஆகச் சிறந்த நாடு, ஆனால் நாம் மிக ஆழமான பொருளாதார சவாலை எதிர்கொள்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. நமக்கு தற்போது ஸ்திரத்தன்மையும் ஒற்றுமையும் தேவை, நமது கட்சியையும் நாட்டையும் ஒன்றாக முன்னெடுத்துச் செல்வதற்கு நான் முன்னுரிமை அளிக்க இருக்கிறேன்.
அது மட்டுமே தற்போதைய இக்கட்டான சூழலில் இருந்து நம்மை மீட்க ஒரே வழி, அதனால் மட்டுமே நமது எதிர்கால சந்ததியினர் வளமபெற முடியும். இந்த இக்கட்டான தருணத்தில் நான் உங்களுக்கு நேர்மையுடனும் பணிவுடனும் சேவை செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.
@reuters
மேலும், பிரித்தானிய மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கவும் தாம் தயார் என ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை துறந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ரிஷி சுனக் அடுத்த பிரதமராக வேண்டும் என தங்கள் விருப்பத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் திடீரென்று முட்டுக்கட்டையாக முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் போட்டியிட விருப்பம் தெரிவிக்க, ரிஷி சுனக்கின் வெற்றி தள்ளிப்போனது. ஆனால், போதுமான உறுப்பினர்கள் ஆதரவைத் திரட்ட போரிஸ் ஜோன்சன் தத்தளிக்க, இறுதியில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது ரிஷி சுனக் பிரித்தானியாவின் 57வது பிரதமராக பொறுப்பேற்கவிருக்கிறார்.