அந்த கசப்பான அனுபவத்துக்குப் பின் பிரதமராவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை: மனம் திறக்கும் ரிஷி சுனக்...
அந்த கசப்பான அனுபவத்துக்குப் பின் பிரதமராவேன் என தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் ரிஷி சுனக்.
அவர் குறிப்பிடுவது பிரதமர் போட்டின்போது நடந்த அரசியல் விளையாட்டைத்தான்.
பிரித்தானிய பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்யும் ஒரு நிலை உருவானது.
அவருக்கு பதில் ஒருவரை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான போட்டி துவங்கியது.
போட்டியில் சரசரவென முன்னேறிக்கொண்டிருந்தார் ரிஷி. ஆனால், கடைசி நேரத்தில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரித்தானிய பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
வேகமாக முன்னேறி வந்த ரிஷி கடைசி நேரத்தில் அவரது சக நாடாளுமன்ற உறுப்பினர்களால் கைவிடப்பட்டதற்குக் காரணம் அவரது தோலின் நிறமாகக் கூட இருக்கலாம் என பிரித்தானிய மக்களில் சிலரே கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், பிரதமருக்கான போட்டியில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ் எதிர்பார்த்ததுபோல பிரதமர் பொறுப்பு எளிதாக இருக்கவில்லை. தனது கொள்கைகளால் வீழ்ச்சியடையும் பிரித்தானிய பொருளாதாரத்தை மீட்க முடியாது என்பதை புரிந்துகொண்ட லிஸ், சகநாடாளுமன்ற உறுப்பினர்களும் அழுத்தம் கொடுக்கவே 46 நாட்களிலேயே பதவி விலக, கட்சியின் நலன் கருதி ரிஷியை தலைவராக தேர்வு செய்தார்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினர்.
இந்நிலையில், தான் சந்தித்த கசப்பான பிரதமர் போட்டியில் தோற்ற பிறகு மீண்டும் பிரதமராவேன் என தான் எதிர்பார்க்கவேயில்லை என்று கூறியுள்ளார் ரிஷி.
பிரதமரானபின் ஊடகங்களுக்கு முதல்முறையாக பேட்டியளித்துள்ள ரிஷி தான் பிரதமர் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தத் துவங்கியதாகவும், ஆனாலும், தொடர்ந்து உழைப்பது தனது கடமை என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.