லிஸ் ட்ரஸ்ஸுக்கு பதிலாக இவர்தான் பிரதமராகவேண்டும்: மக்கள் விருப்பத்தைக் காட்டும் ஆய்வு முடிவுகள்
லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள திணறிவரும் நிலையில், அவருக்கு பதிலாக மக்கள் யார் பிரதமராகவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்பது முதலான கேள்விகள் மக்கள் முன் வைக்கப்பட்டன.
கன்சர்வேட்டிவ் கட்சியே வேண்டாம் என்று கூட மக்கள் பதிலளித்திருக்கிறார்கள்.
பிரித்தானியா பொருளாதார பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் நிலையில், தற்போதைய பிரதமர்தான் பிரச்சினைகளுக்குக் காரணம் என பெரும்பாலான பிரித்தானியர்கள் நினைக்கிறார்கள்.
அடுத்து தேர்தல் வரக்கூடும் என்ற கருத்து பரவி வரும் நேரத்தில், சமீபத்தைய ஆய்வு ஒன்றின் முடிவுகள், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் வயிற்றில் புளியைக் கரைக்கும் விதத்தில் அமைந்துள்ளன.
மற்ற கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தால் கூட பரவாயில்லை, கன்சர்வேட்டிவ் கட்சியே வேண்டாம், என மக்கள் கருத்து தெரிவித்துள்ளதுதான் அதற்குக் காரணம்.
பிரித்தானியாவில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு யார் காரணம், லிஸ் ட்ரஸ்ஸா அல்லது சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சர் Kwasi Kwartengஆ என்ற கேள்விக்கு, லிஸ் ட்ரஸ்தான் காரணம் என 47 சதவிகிதத்தினரும், Kwasi Kwartengதான் என 7 சதவிகிதத்தினரும் பதிலளித்துள்ளார்கள்.
லிஸ் ட்ரஸ்ஸுக்கு பதில் யார் பிரதமராகவேண்டும் என்ற கேள்விக்கு, ரிஷி சுனக் என 21 சதவிகிதம் பேரும், போரிஸ் ஜான்சன் என 16 சதவிகிதம் பேரும் பதிலளித்துள்ளனர். ஆய்வில் பங்கேற்ற பிரித்தானியர்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் (71%) லிஸ் ட்ரஸ் பதவி விலகவேண்டும் என்றும், அவர் பதவி விலகினதும் உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தவேண்டும் என்று 69 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.
67 சதவிகிதத்தினர், அவர் பதவி விலகினாலும் சரி, இல்லையென்றாலும் சரி, பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆகமொத்தத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் மீது மக்கள் வைத்திருந்த மதிப்பை
அவர்கள் இழந்துள்ளார்கள் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.