வெள்ளையர்தான் பிரதமராகவேண்டும்: இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் மீது இனவெறுப்பு விமர்சனம்
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சில வெள்ளையர்களுடைய மனதிலிருந்து இனவெறுப்பை மட்டும் அகற்றவே முடியாது போலிருக்கிறது.
பிரதமர் போட்டியில் களமிறங்கியுள்ள இந்திய வம்சாவளியினர் ரிஷி சுனக் மீது இனரீதியான விமர்சனம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பிரபல வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஒருவர், இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் மீண்டும் களமிறங்கியுள்ள நிலையில், அவரது தோலின் நிறத்தை மேற்கோள் காட்டி, அவர் பிரித்தானியரே அல்ல என்னும் வகையில் பேசிய விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LBC வானொலி நிகழ்ச்சியில் பேசிய ஜெர்ரி என்னும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர், போரிஸ் ஜான்சனைப்போல ரிஷி இங்கிலாந்தை நேசிக்கவில்லை என்றும், பெரும்பாலானோரின் கருத்துப்படி அவர் பிரித்தானியரே அல்ல என்றும் கூறியுள்ளார்.
அவருக்கு பதிலளித்த நிகழ்ச்சி தொகுப்பாளரான Sangita Myska, உண்மையில் ரிஷி பிரித்தானியாவில் பிறந்தவர் என்றும், போரிஸ் ஜான்சனோ அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தவர் என்றும் கூறினார்.
தொடர்ந்து வாதம் செய்த ஜெர்ரியோ, நான், பாகிஸ்தானுக்கோ அல்லது சவுதி அரேபியாவுக்கோ பிரதமராக முடியுமா? அது முடியாதே என்று கூறியதுடன், இங்கிலாந்தில் வாழ்பவர்களில் 85 சதவிகிதம்பேர் வெள்ளையர்கள், அவர்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர்தான் தங்களுக்குப் பிரதமராகவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
நான் இந்தியாவுக்குப் போய், அங்கே பிரதமராக முடியாது இல்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ஜெர்ரி.
ஜெர்ரிக்கு சுடச்சுட பதிலளித்த Sangita, நீங்கள் அடிப்படையில் ஒரு இனவெறியர் என நினைக்கிறேன், உங்களுக்கும் மற்ற கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கும் இப்படி ஒரு எண்ணம் இருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
அவர் சொல்வதில் பெரிய ஆச்சரியமும் இல்லை. காரணம், கடந்த முறை பிரதமர் போட்டியின்போதும், வேகமாக போட்டியில் முன்னேறிய ரிஷியை, கடைசி நேரத்தில் அவரது தோலின் நிறந்தைக் காரணம் காட்டி ஒதுக்கியவர்கள்தானே இந்த கன்சர்வேட்டிவ் கட்சியினர்!