பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா திட்டத்திற்கு இன்னொரு பின்னடைவு: நற்பெயரைக் கெடுக்கும் என அச்சம்
பிரித்தானியா புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான ருவாண்டா திட்டம் கட்டாயம் அமுலுக்கு கொண்டுவரப்படும் என்று ரிஷி சுனக் அரசாங்கம் அடம்பிடிக்கும் நிலையில், இன்னொரு பின்னடைவாக விமான நிறுவனங்கள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நற்பெயரைக் கெடுக்கும் என்று அச்சம்
வெளியான தரவுகளின் அடிப்படையில், கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவிற்கு புலம்பெயர்ந்தோரை அனுப்ப ஒரு வணிக விமான நிறுவனமும் இதுவரை கையெழுத்திடவில்லை என்றே தெரியவந்துள்ளது.
@reuters
ரிஷி சுனக் அரசாங்கத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய இந்த திட்டமானது தங்களின் நற்பெயரைக் கெடுக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ருவாண்டா திட்டம் செயலுக்கு வந்தால், வணிக விமான நிறுவனங்கள் ஒத்துழைக்க முன்வரும் என்றே அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வணிக விமான நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தால் பாதுகாப்புத்துறை விமானங்கள் கூட பயன்படுத்த ரிஷி சுனக் அரசாங்கம் தயாங்காது என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, அரசாங்க செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், சட்டவிரோத குடியேறிகளின் படகுகளை தடுப்பதற்கும், ருவாண்டாவுக்கு விமானங்களை இயக்குவதற்கும் தேவையான அனைத்தையும் செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார்.
வாக்காளர்களை திசைதிருப்ப
பெரும் திரளான மக்களை ஏற்றுக்கொள்ள ருவாண்டா தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், பல நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் எதிர்காலத்தில் விமான சேவைகளை பயன்படுத்திக்கொள்ள வலுவான திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Picture: Pixel8000
இந்த நிலையில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தால் ருவாண்டா திட்டம் சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும் ரிஷி சுனக் அரசாங்கம் அதன் முதன்மையான புகலிடக் கொள்கையை வலுவுடன் முன்னெடுக்கவே திட்டமிட்டுள்ளது.
ஆனால் ரிஷி சுனக்கின் இந்த ருவாண்டா திட்டம் மீதான வேகம் என்பது மற்ற திட்டங்களில் அவரது தோல்விகளில் இருந்து வாக்காளர்களை திசைதிருப்பவும் அவரது கட்சியில் தனது செல்வாக்கை தக்கவைக்கவும் மட்டுமே என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |