பிரித்தானியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ரிஷி சுனக் எப்படி நுழைந்தார் தெரியுமா?
பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவி வருகிறது. முன்னாள் நிதியமைச்சர், சுனக் 2015 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
பிரித்தானியாவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் ரிஷி இடம்பிடித்ததால், அவரது நிகர சொத்து மதிப்பு குறித்து அறிய மக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். ரிஷி சுனக் போரிஸ் ஜான்சனை மாற்றக்கூடிய ஒரு சாத்தியமான வேட்பாளராக மட்டுமல்லாமல், அவரது நிதி செல்வத்தின் காரணமாகவும் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகிறார்.
அதன்படி ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்க்ஷதா மூர்த்தி ஆகியோர் 730 மில்லியன் பவுண்டுகள் நிகர சொத்து மதிப்புடன் இருப்பதாக தெரிகிறது. இந்த தம்பதிக்கு லண்டனில் 15 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள நான்கு வீடுகள், யார்க்ஷயரில் ஒரு வீடு மற்றும் சில வீடுகள் வெளிநாடுகளிலும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சொத்துக்கள் அனைத்தும் ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து கிடக்கின்றன. சுனக் தனது வாழ்நாளில் நல்ல வருமானத்தை பெற்றிருந்தாலும் அவரது செல்வத்தின் பெரும்பகுதி அக்க்ஷதா மூர்த்தியை 2009ஆம் ஆண்டில் அவர் திருமணம் செய்துகொண்ட பிறகே அதிகரித்ததாக கூறப்படுகிறது.
அக்க்ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் ஆவார். அவர் இந்தியாவின் ஆறாவது பெரிய பணக்காரர் ஆவார். நாராயண மூர்த்தியின் வணிகத்தில் அவரது வாரிசான அக்க்ஷதாவுக்கு பெரிய பங்குகள் உள்ளன.
இந்திய ஐடி நிறுவனத்தில் £690 மில்லியன் பங்குகளில் இருந்து பெறும் வருடாந்திர ஈவுத்தொகைக்கு சட்டப்பூர்வமாக வரி செலுத்தவில்லை என அக்க்ஷதா மூர்த்தி மீது சர்ச்சை எழுந்த நிலையில் பின்னர் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் வரி செலுத்த ஒப்புக்கொண்டார்.
பிரதமர் வேட்பாளர் ஆனதும் ரிஷி சுனக் கூறுகையில், நம் நாட்டை வழிநடத்தும் திட்டம் என்னிடம் உள்ளது என்றும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தி மக்களின் வரிச்சுமையை குறைப்பேன் என்றும் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.