இந்திய வம்சாவளியினர் என்பதால் இனவெறுப்பை சந்தித்த ரிஷி சுனக்: தாயார் செய்த செயல்
உலக நாடுகள் பலவற்றில் இன்னமும் இனவெறுப்புச் சம்பவங்கள் தொடர்கின்றன. குறிப்பாக ஆசியர்களும், கருப்பினத்தவரும் பல நாடுகளில் இனவெறுப்பை எதிர்கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் பிரித்தானியாவின் பிரதமரானார். பிரித்தானியாவில் வளர்ந்த அவர் இனவெறுப்பை சந்தித்தாரா, அதை எதிர்கொள்ள அவரது பெற்றோர் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று இன்றிரவு பிரித்தானிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.
சிறுவயதில் இனவெறுப்பை சந்தித்த ரிஷி
இந்தியர்களான ரிஷியின் தாத்தாவும் பாட்டியும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு புலம்பெயர்ந்து, பின் 1960களில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள்.
இந்திய வம்சாவளியினர் என்பதால், தான் சிறு வயதில் இனவெறுப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ரிஷி. மேலும், தனது தம்பியையும் தங்கையையும் மற்றவர்கள் மோசமாக விமர்சிப்பதைக் கேட்டு தான் வேதனையடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாய் எடுத்த நடவடிக்கை
தாங்கள் வித்தியாசமானவர்கள் என்ற எண்ணம் தங்களுக்கு இருந்துகொண்டே இருக்கும் என்று கூறியுள்ள ரிஷி, தானும் தன் தம்பி தங்கையும், பேசும்போது தங்கள் உச்சரிப்பு வித்தியாசமாகத் தெரிந்துவிடக்கூடாது என்பதில் தன் தாய் மிகவும் கவனம் செலுத்தியதாக தெரிவிக்கிறார்.
அதற்காக, தங்களை தங்கள் தாய் சிறப்பு வகுப்புகளுக்கும் அனுப்பியதாக தெரிவித்துள்ளார் ரிஷி. இதற்கு முன் இனரீதியில் சிறுபான்மையினரான ஒருவர் பிரித்தானிய பிரதமராக இல்லாததால், அப்படி ஒருவர் ஒரு நாள் பிரித்தானியாவின் பிரதமராவார் என தான் கனவிலும் நினைத்ததில்லை என்கிறார் ரிஷி.
200 ஆண்டுகளில், பிரித்தானியாவுக்கு பிரதமரான முதல் இந்திய வம்சாவளியினர் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |