கனடாவுடன் மோதல்: இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்துகிறதா பிரித்தானியா?
கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான மோதல் உலக நாடுகளை பரபரப்படையச் செய்துள்ளது. இந்நிலையில், கனடாவுடன் மோதல் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை பிரித்தானியா நிறுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கனடாவின் குற்றச்சாட்டு
G 20 உச்சி மாநாட்டுக்காக இந்தியா சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கனடாவில் காலிஸ்தான் அமைப்பினர் இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துதல், தூதரக அதிகாரிகளுக்கெதிரான வன்முறை முதலான விடயங்கள் குறித்துப் பேச, கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நாடு திரும்பிய ட்ரூடோ, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
அதைத் தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, நாட்டை விட்டு வெளியேறும்படி கனடா உத்தரவிட்டது. இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக, கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றியது இந்தியா. மொத்தத்தில், இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படுமா?
இப்படி கனடா இந்தியா உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதனால் இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக பேசுவார்த்தைகள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விடயம் குறித்து நேற்று பேசிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித்தொடர்பாளர், கனடாவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் தலையீடு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியிருந்தாலும், பிரித்தானியா இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடரும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் முன்போல் தொடரும் என்று கூறியுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித்தொடர்பாளர், கனேடிய அதிகாரிகள் தங்கள் வேலையைச் செய்வார்கள், நான் முந்திக்கொண்டு அது குறித்து எதுவும் சொல்லப்போவதில்லை.
எங்களுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடத்தும் நாடுகளுடன் எங்களுக்கு பிரச்சினை இருந்தால், அவற்றை அந்த நாடுகளுடன் நேரடியாக பேசித் தீர்த்துக்கொள்வோம். இந்தியாவைப் பொருத்தவரை, இப்போது நாங்கள் இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கிறோம். மற்ற பிரச்சினைகளை நாங்கள் அதனுடன் இணைக்க விரும்பவில்லை என்றார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |