பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்கின் குடும்ப பின்னணி
பிரித்தானியாவின் அரசியல் பரபரப்புக்கு இடையே பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்.
இவரது குடும்ப பின்னணி பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ரிஷி சூனக்: சில அடிப்படை தகவல்கள்
வயது: 42
பிறந்த இடம்: செளதாம்டன்
வீடு: லண்டன் மற்றும் யார்க்ஷையர்
கல்வி: வின்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்ஃபொர்டு பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம்
குடும்பம்: தொழிலதிபர் அக்ஷதா மூர்த்தியை மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
நாடாளுமன்ற தொகுதி: ரிச்மொண்ட் (யார்க்ஷையர்)
குடும்பப் பின்னணி
ரிஷி சூனக்கின் பெற்றோர் கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்தவர்கள். இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவரது தந்தை தற்போதைய கென்யாவில் பிறந்து வளர்ந்தார், அதே நேரத்தில் அவரது தாயார் தங்கனிகாவில் (பின்னர் தான்சானியாவின் ஒரு பகுதியாக மாறியது) பிறந்தார்.
இவரது தாத்தாக்கள் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள் மற்றும் கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து 1960களில் தங்கள் குடும்பங்களுடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர்.
ரிஷி சூனக், 1980இல் செளத்தாம்டனில் பிறந்தார். அங்கு அவரது தந்தை பொது மருத்துவராக இருந்தார். இவரது தாயார் சொந்தமாக மருந்தகத்தை நடத்தி வந்தார்.வின்செஸ்டர் கல்லூரியில் பயின்ற இவர் பின்னர் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படிக்க ஆக்ஸ்போர்டு சென்றார்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்கும் போது, இந்திய கோடீஸ்வரரும், ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனருமான நாராயணமூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியைச் சந்தித்தார் ரிஷி சூனக். பிறகு இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
பிரதமர் பதவிக்கான தமது முந்தைய தலைமை பிரசாரத்தின் போது, காலநிலை மாற்றத்தின் பின்னணியை குறிப்பிடும்போது, அவர் தனது மகள்களை அடிக்கடி குறிப்பிட்டார்.
பிபிசி தொலைக்காட்சி விவாதத்தின் போது பருவநிலை மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சூனக், "எனது வீட்டில் நிபுணர்களாக இருக்கும் எனது இரண்டு இளம் மகள்களிடமிருந்து ஆலோசனை பெற்றேன்" என்றார்.
2001 முதல் 2004ஆம் ஆண்டு வரை, சூனக் கோல்ட்மேன் சாக்ஸ் என்ற நிறுவனத்தின் நிதி ஆய்வாளராக இருந்தார். பின்னர் இரண்டு ஹெட்ஜ் முதலீட்டு நிறுவனங்களில் அவர் பங்குதாரராக இருந்தார்.
பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் ரிஷி சூனக், தமது சொத்து மதிப்பு என்ன என்பதை பகிரங்கமாக இதுவரை தெரிவிக்கவில்லை.