மாணவர் கொத்தணி உருவாகும் அபாயம்! அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சினைக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால் தீர்வு தரப்படும் என்ற நிலையில் ஆசிரியர்களின் எதிர்ப்புகள் குறித்து அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் ரோஹித அபேவர்தன (Rohitha Abeywardena) இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அரசாங்கத்தின் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
24 வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த இந்த பிரச்சினைக்கு தீா்வுக்காணப்படும் என்றும் ஆசிரியர்களுக்கு தெரியும்.எனினும் சிலர் தமது முயற்சியால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வுக்காணப்பட்டதாக காட்டிக்கொள்வதற்காக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் காலை பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கு படிப்பிக்கின்றனர்.மாலையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.ஆர்ப்பாட்டங்களில் ஆசிரியர்கள் சிலர் ஈடுபடும் போது அதிகளவான அரசியல்வாதிகள் அதில் பங்கேற்கின்றனர்.
மாணவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், ஆசிரியர்களின் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் காரணமாக கோவிட் பரவல் ஏற்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோரால் கோவிட் பரவல் பாடசாலை மாணவர்களுக்கு பரவும் ஆபத்து உள்ளது. இதன்மூலம் ”மாணவர் கொத்தணி” உருவாகும் நிலையும் உள்ளதாக அமைச்சர் ரோஹித அபேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.