புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்..கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை
ரிதன்யா இறப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை நேர்காணல் ஒன்றில் அவரது தந்தை பகிர்ந்துள்ளார்.
ரிதன்யாவின் பெற்றோர்
திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

திருமணமான 78 நாட்களில் இளம்பெண் விபரீத முடிவு.., அப்பாவுக்கு அனுப்பிய ஆடியோவால் மாமனார் மாமியார் கைது
மகளின் இறப்பை தாங்க முடியாமல் ரிதன்யாவின் பெற்றோர் கதறி அழுத வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
அவற்றில் 'தன் மகள் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறியது பெருமையாக இருக்கிறது' என்று ரிதன்யாவை தந்தை அண்ணாதுரை பேசியதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்மறை விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ரிதன்யாவின் தந்தை
இந்த நிலையில், யூடியூப் ஊடகம் ஒன்றிற்கு ரிதான்யாவின் தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா ஆகியோர் நேர்காணல் அளித்துள்ளனர்.
அதில், "பொண்ணு இறந்த துக்கத்தை தாளமுடியாமல் இருக்கும்போது அந்த வார்த்தை தெரியாமல் வந்துவிட்டது.
பொண்ணு இறந்ததற்காக எவனாவது பெருமைப்படுவானா; எல்லாம் எமோஷனல்ல வந்த வார்த்தைகள்தான்.
சொத்து, வசதியைப் பார்த்து நாங்கள் திருமணம் செய்து வைக்கவில்லை. நல்ல பையன், வீட்டிற்கு ஒரே மகன் பக்கத்திலேயே இருப்பதால் எங்கள் மகளை அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துதான் திருமணம் செய்து வைத்தோம்" என்றார்.
மேலும் அவர், "எங்க பையன் கிட்ட ரிதன்யா நிறைய பேசினார். ரொம்ப டார்ச்சர் பண்றாங்க; சொத்தை பத்தியும் கேட்குறாங்க, எல்லாரும் தனித்தனியா சாப்பிடுறாங்க, எனக்கு மெண்டலா டிஸ்டர்ப் ஆகுது. மெய்ன் டோர், மெய்ன் கேட் எல்லாத்தையும் பூட்டி வெச்சுடுறாங்க. சமயலறைக்குள் போயி சமைக்க கூடாது, வாஷிங் மெஷின்ல துவைக்கக் கூடாது கையிலதான் துணி துவைக்கணும் என்கிறாங்க.,அப்புறம் பாத்திரம் கழுவிட்டு வீட்டிலேயே இருக்கணும். வேற என்ன பண்றதுன்னு சொல்லி அழுதிருக்கிறாள்.
வீட்டுக்கு வந்தபோது நான் புரிஞ்சிகிட்டு 15 நாள் இங்கேயே இரு. அவங்க போன் பண்ணா நான் பேசிக்குறேன் என்றேன். அதன் பின் ரிதன்யா தம்பி கூட ஆஸ்திரேலியாவில் ஒரு வருஷம் இருக்கட்டும்; இல்லனா ஏதவாது வேலைக்கு போயிட்டு ரெண்டாவதா கூட எதவாது பார்த்துக்கலாம் சாமின்னு நாங்க சொன்னோம்.
உடனே, ரெண்டாவது கல்யாணம் பண்றதுக்கு நான் என்ன நாயா, வாழ்ந்தா அவன் கூடத்தான். இல்லனா உங்க கூட வந்து இருந்துப்பேன்னு சொன்னா. ஆனால் அவளுக்கு நடந்த கொடுமையெல்லாம் முந்தநநாள் நைட் அம்மா கிட்ட சொல்றா.
நாகராஜ் என்று ஒருத்தர் சொந்தக்காரர் வராரு. அவரை பெரியப்பான்னுதான் பொண்ணு கூப்பிடுவா. அவரு என்ன பிரச்சனைன்னு சொல்லுன்னு கேட்டார். அப்போது அப்பா இருக்கும்போது சொல்ல முடியாது சொல்ல, நான் வெளியே போய்ட்டேன். ஒரு 2 மணிநேரம் கழித்து அவரு போன் பண்றாரு நான் வந்துட்டேன்.
பொண்ணு எல்லாம் சொல்லிட்டா, எல்லா குடும்பத்திலயும் இருக்கிறதுதான்; பேசிக்கலாம் பிரதர், கூலா இருங்கன்னு சொல்லிட்டு போய்ட்டார். ஆனால் அவர் பொண்ணு கிட்ட "நீ வாழாம இங்க வந்து இருந்துட்டா உன் அப்பா, அம்மா வாழ்க்கையே வேதனைக்குரியதாயிடும்" அப்படின்னு சொல்லியிருக்காரு. அதை கேட்டதுனால தைரியமா இருந்த பொண்ணு திரும்ப மனஉளைச்சல் ஆகிட்டா.
மாமனார், மாமியார் மன்னிப்பு கேட்டதால திருப்பி அனுப்பிடுவாங்களோங்கிற பயம் ஒருபக்கம்; ரெண்டாவது இவரு வந்து பேசினதுக்கு அப்புறம், நாங்க கேவலப்பட்டிருவோம்ன்னு ஆழமா அவ மனசுல பதிந்திருச்சு.
என் பொண்ணுக்கு நீதி கிடைக்க போராடிட்டி இருக்கிறேன். எந்த பொண்ணுக்கு இது ஆகக்கூடாதுன்னுதான் போரடிட்டு இருக்கோம். சமூகத்திற்காக நாங்க பயப்பட்டதில்லை" என தெரிவித்திருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |