போலி கொரோனா சுகாதார பாஸுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்: பின்னர் நடந்த துயரம்
பிரான்சில் பல்லாயிரக்கணக்கானோர் போலி கொரோனா சுகாதார பாஸ் வைத்திருக்கலாம் என அரசு கருதுகிறது.
இந்நிலையில், போலி கொரோனா சுகாதார பாஸ் வைத்திருந்த ஒரு பெண் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக அனுமதிக்கப்பட, அவர் கொரோனா தடுப்பூசி பெற்றதாக நம்பி அதற்கேற்ற வகையில் மருத்துவர்கள் சிகிச்சையளிக்க, கடைசியில் அவர் பரிதாபமாக இறந்துபோனார்.
சட்ட விரோதமாக போலி கொரோனா சுகாதார பாஸ் விற்பவர்கள் கொலைகாரர்கள் என இப்போது கோபத்தில் கதறிக்கொண்டிருக்கிறார் அவரது கணவர்.
இப்படி போலி கொரோனா சுகாதார பாஸ் விற்பவர்கள் தொடர்பில் 400க்கும் அதிகமான விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளன என்கிறார் பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin. துரதிர்ஷ்டவசமாக, சுகாதாரப்பணியாளர்களே இந்த மோசடியுடன் தொடர்பிலிருப்பது கவலையளிப்பதாக உள்ளது என்கிறார் அவர்.
போலி கொரோனா சுகாதார பாஸ் வழங்குவதற்கான தண்டனை கடுமையானது என்று கூறியுள்ள அவர், அதற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 75,000 முதல் 150,000 யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்றார்.
டிசம்பர் மாதத் துவக்கத்தில், Aïcha என்ற 57 வயதுள்ள பெண், பாரீஸிலுள்ள மருத்துவமனை ஒன்றில் கடுமையான கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட, அவர் வைத்திருந்த போலி கொரோனா சுகாதார பாஸை உண்மையானது என்று நம்பிய மருத்துவர்கள் அதன் அடிப்படையில் அவருக்கு சிகிச்சையளித்துள்ளார்கள். அதாவது, அந்த போலி கொரோனா சுகாதார பாஸ் காரணமாக அந்த பெண்ணுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிகிச்சையளித்தும் Aïchaவின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படாததால் குழப்பமடைந்த மருத்துவர்கள் அவருக்கு பல மருத்துவப் பரிசோதனைகளை செய்ய, அப்போதுதான் அவரது உடலில் கொரோனா ஆன்டிபாடிகள் இல்லை என்பதை, அதாவது அவர் கொரோனா தடுப்பூசி பெறவில்லை என்பதையும், அவர் வைத்திருந்த தடுப்பூசி சான்றிதழ் போலியானது என்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஆனால், அதற்குள் காலம் கடந்துவிட்டிருக்கிறது. ஆம், Aïcha உயிரிழந்துவிட்டார்.
Aïchaவின் கணவர் தனக்கு போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்கியவர் மீது முறைப்படி புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். Aïchaவுக்கு அந்த போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழை வழங்கியவர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னைப் பொருத்தவரை அவர் ஒரு மருத்துவர் அல்ல, அவர் ஒரு கொலைகாரர் என்கிறார் Aïchaவின் கணவர்.
இதற்கிடையில் அந்த போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழை வழங்கிய மருத்துவரின் மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டுள்ளது.