பொலிஸ் உடை அணிந்த கொள்ளையர்கள்... பிரான்சில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரான்சில் ஒரு குறிப்பிட்ட பகுதியில், பொலிஸ் வேடத்தில் கொள்ளையர்கள் நடமாடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பிரான்சிலுள்ள Dordogne என்ற இடத்தில், பொலிஸ் உடையணிந்த குற்றவாளிகள் மக்களிடம் கொள்ளையடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
நடப்பது என்னெவென்றால், பொலிஸ் உடையில் சிலர் வந்து வீடுகளின் கதவைத் தட்டுகிறார்கள். வீட்டிலுள்ள முக்கியமான பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா? எங்கு வைக்கப்பட்டுள்ளன என்று கேட்கிறார்கள். அவர்களை பொலிசார் என நம்பும் மக்கள் அவர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க, அவர்களோ, அந்த பொருட்களைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடுகிறார்கள்.
பொலிஸ் உடையை நம்பி அவர்களை வீட்டுக்குள் அனுமதித்த பலர் இவ்விதம் பொருட்களைப் பறிகொடுத்துள்ளார்கள்.
ஆகவே, பொலிசார் மக்களுக்கு சில அறிவுரைகளை அளித்துள்ளார்கள்.
அதன்படி, யாரையும் வீட்டுக்குள் விடவேண்டாம் என்றும், வீட்டுக்கு வெளியே வந்திருப்பது யார் என பார்க்கும் வகையில் கதவில் துவார அமைப்பு ஒன்றை பொருத்திக்கொள்ளுமாறும், பொலிசார் வந்தால் அவர்களது அடையாள அடையைக் காட்டுமாறு கேட்கவேண்டும் என்றும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளதுடன், உண்மையான பொலிஸ் அடையாள அட்டை எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் படங்களை பேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளார்கள்.
அப்படியும் வந்திருப்பவர் உண்மையான பொலிசார்தானா என சந்தேகம் ஏற்பட்டால், உங்கள் மொபைலிலிருந்து 17 என்ற எண்ணுக்கு அழைத்து உறுதி செய்துகொள்ளுமாறும் அவர்கள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.