விராட் கோலிக்கு இப்படி பந்து போட்டா ஈசியா அவுட்டாக்கலாம்! ரகசியத்தை உடைத்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன்
விராட் கோலியை அவுட்டாக்கியதன் ரகசியத்தை ஆட்டநாயகன் விருது பெற்ற ராபின்சன் வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை துவம்சம் செய்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் 9 விக்கெட்களை அள்ளிய நிலையில் ஆட்டநாயகன் விருதை பெற்றார். மேலும் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேட்டியளித்த ராபின்சன் விராத் கோலி விக்கெட்டை வீழ்த்தியது குறித்தும் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி ஆட்டநாயகன் விருது பெற வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு. அதை நான் இன்று அடைந்துள்ளேன். மேலும் பந்துவீசும் போது அடிக்கடி சீனியர் வீரரான ஆண்டர்சனிடம் சில அறிவுரைகளை கேட்டுக்கொண்டே இருந்தேன்.
மேலும் கோலி விக்கெட்டை வீழ்த்துவது எப்போதும் சிறப்பான ஒன்று. முதலில் அவர் இரண்டு பவுண்டரி அடித்தார். அதன்பின்னர் அவரது விக்கெட்டை வீழ்த்தியது மிக பெருமையாக கருதுகிறேன். கோலியின் விக்கெட்டை வீழ்த்தும் திட்டம் என்பது சுலபம்தான்.
கோலியை அடிக்க விட்டு பிறகு நான்காவது அல்லது ஐந்தாவது ஸ்டம்பில் பந்து வீசினால் எட்ஜாகி ஆட்டமிழந்துவிடுவார் என்று கருதினோம். அதே போல் தான் நடந்தது என கூறியுள்ளார்.