சென்னை அணி வீரரை தொடர்ந்து புறக்கணிக்கும் ரோகித் சர்மா - ரசிகர்கள் கடும் கண்டனம்
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சென்னை அணி வீரரை தொடர்ந்து புறக்கணிப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்த போட்டியில் ஆடும் லெவனில் வழக்கமாக ஓப்பனிங் களமிறங்கும் கே.எல்.ராகுலுக்கு பதிலாக திடீரென விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார்.சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பண்ட்க்கு எச்சரிக்கை கொடுப்பதற்காக இந்த முயற்சியை ரோகித் எடுத்ததாக கூறப்படுகிறது.
அதேசமயம் தொடர்ந்து சென்னை அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் புறக்கணிக்கப்படுவதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். துடிப்பான ஓப்பனிங் வீரர் இருக்கும் போது ரிஷப் பண்டை அந்த இடத்தில் களமிறக்குவது எப்படி நியாயம் என ரசிகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். ஏற்கனவே தென்னாப்பிரிக்க தொடரிலும் அவருக்கு 3 போட்டிகளிலும் வாய்ப்பு தரப்படவில்லை.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவதற்கு சூழல் ஏற்பட்ட போதும் பண்டை காப்பாற்ற ரோகித் சர்மா ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.