டிராவிட்டும்... இவரும் சேர்ந்தால் இந்தியா நிச்சயமாக ஐசிசி கோப்பையை அடிக்கும்: காம்பீர் உறுதி
இந்திய அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் சென்று கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக்கோப்பை டி20 தொடங்குவதற்கு முன்பு, இந்திய அணி கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருந்தது.
ஆனால், தன்னுடைய முதல் போட்டியிலே பாகிஸ்தானுடனும், அடுத்து நியூசிலாந்துடனும் என இந்தியா அடுத்தடுத்த தோல்வியை சந்திதத்தால், அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை எந்த ஒரு ஐசிசி கோப்பையை வெல்லாததால், அவர் மீதும் கடும் விமர்சனம் எழவே, அவர் உலகக்கோப்பை டி20 துவங்குவதற்கு முன்பே தான் இந்த டி20 உலகக்கோப்பை தொடரோடு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த உலகக்கோப்பைக்கு பின் அணியில் இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நிச்சயமாக டிராவிட்டும், ரோகித்சர்மாவும் சேர்ந்தால், இந்திய அணிக்கு நிச்சயம் ஐசிசி கோப்பை பெற்று தருவார்கள், அது கூடிய விரைவில் நடக்கும் என்று கூறியுள்ளார்.