பாடசாலை கட்டணமாக ரூ 275 செலுத்த முடியாமல் தடுமாறிய ரோகித் சர்மா குடும்பம்... பின்னர் நடந்தது வரலாறு
கிரிக்கெட் உலகக் கிண்ணம் இறுதிப் போட்டி 19ம் திகதி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மாவின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிய சம்பவம் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கிரிக்கெட்டில் தனக்கான முத்திரை
உலகக் கிண்ணம் இறுதிப் போட்டி 19ம் திகதி அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கிறது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. வலக்கை துடுப்பாட்ட வீரரான ரோகித் சர்மா கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியை தலைமை தாங்கி வருகிறார்.
மட்டுமின்றி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தனக்கான முத்திரை பதித்தவர்களில் ரோகித் சர்மாவும் ஒருவர். 1999ல் ரோகித் சர்மாவின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிய சம்பவம் ஒன்று நடந்தது. அதுவே அவர் இப்போது அனுபவிக்கும் அனைத்து பெயர் புகழுக்கும் காரணம்.
தனது பாடசாலை நாட்களில் ஆஃப் ஸ்பின்னராக வலம் வந்துள்ளார் ரோகித் சர்மா. ஒரு போட்டியின் போது, ரோகித் சர்மாவின் தனித்திறன் பயிற்சியாளர் தினேஷ் லாட்டின் கவனத்தை ஈர்த்தது.
மட்டுமின்றி, ரோகித்தின் ஆட்டத்தால் மிகவும் ஈர்க்கப்பட்ட அவர், விளையாட்டில் அவரது எதிர்காலம் குறித்து பெற்றோரிடம் பேச விரும்பினார். அந்த நாட்களில் ரோகித் சர்மா தமது மாமா மற்றும் தாத்தா பாட்டியுடன் மும்பையின் போரிவலி பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தினேஷ் லாட்டின் கோரிக்கையை ஏற்று ரோகித்தின் மாமா அவரை சந்திக்க சென்றுள்ளார். ரோகித்தின் எதிர்காலம் கருதி அவரை சுவாமி விவேகானந்தர் பள்ளியில் சேர்க்கும்படி தினேஷ் லாட் கட்டாயப்படுத்தியுள்ளார்.
கல்வி கட்டணம் ரூ 275
ஆனால் பொருளாதார சூழல் காரணமாக அவரால் அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அப்போது ரோகித் சர்மாவின் பாடசாலை கட்டணம் வெறும் 30 ரூபாய் தான். ஆனால் சுவாமி விவேகானந்தர் பள்ளியில் கல்வி கட்டணம் ரூ 275 என்பதால், தங்களால் தற்போதைய சூழலில் செலுத்த முடியாது என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தான் தினேஷ் லாட் சுவாமி விவேகானந்தர் பள்ளி நிர்வாகத்தை அணுகி, ரோகித் சர்மாவுக்கு கட்டணமில்லா கல்விக்கு உதவி தேடியுள்ளார். பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு அளிக்கப்படும் சலுகையை அவருக்கு அளிக்க கோரிக்கை வைத்துள்ளார்.
ரோகித் சர்மாவின் திறமை மீது தமக்கு நம்பிக்கை இருந்தது என்றும், அவரை விட்டுவிட தமக்கு மனம் வரவில்லை என்றும் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தினேஷ் லாட் தலைமையில் பயிற்சி பெற்ற ரோகித் சர்மா 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியில் இடம்பெற்றார்.
பின்னர் உள்ளூர் கிரிக்கெட் அணியிலும், இறுதியில் தேசிய அணியிலும் இடம்பெற வாய்ப்பாக அமைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |