ரோகித் சர்மா, விராட் கோஹ்லி ருத்ர தாண்டவம்... ஆப்கானிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா
13வது உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதலில் துடுப்பாட்டம்
இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டம் தெரிவு செய்தது.
இதனையடுத்து அந்த அணியின் துவக்க வீரர்களான ரஹ்மனுல்லா மற்றும் இப்ராஹிம் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தலா 28 பந்துகளை எதிர்கொண்டு முறையே 21 மற்றும் 22 ஓட்டங்களை பதிவு செய்து வெளியேறினர்.
இந்த நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவதாக களமிறங்கிய ஹஷ்மதுல்லா ஷஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஜாய் ஆகிய இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். ஹஷ்மதுல்லா ஷஹிதி 80 ஓட்டங்களும், அஸ்மதுல்லா ஒமர்ஜாய் 62 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
எஞ்சிய வீரர்கள் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ஓட்டங்களை எடுத்தது.
இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 273 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
அதிரடி காட்டிய ரோகித் சர்மா
தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். தொடக்கம் முதல் ரோகித் அதிரடியாக ஆடினார். இஷான் கிஷன் மறுமுனையில் நிலைத்து ஆடினார்.
ரோகித் சர்மா பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் அரைசதம் அடித்தார். அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த ரோகித சர்மா 63 பந்துகளில் சதம் கண்டு அசத்தினார்.
அத்துடன் 84 பந்துகளில் 131 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய இஷான் கிஷன் தன் பங்கிற்கு 47 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோஹ்லி அரைசதம் அடித்தார். 56 பந்துகளை எதிர்கொண்ட கோஹ்லி 55 ஓட்டங்கள் குவித்தார்.
இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 23 பந்துகளை எதிர்கொண்டு 25 ஓட்டங்கள் குவித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 273 ஓட்டங்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |