கடைசி வரை நம்பினோம்.. வேதனையுடன் கூறிய ரோகித் சர்மா
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்த நிலையில், நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது.
ஐதராபாத் அணி நிர்ணயித்த 194 ஓட்டங்கள் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை, மூன்று ஓட்டங்களில் தோல்வியை தழுவியது. இது அந்த அணி சந்திக்கும் 10வது தோல்வியாகும்.
போட்டி முடிந்ததும் பேசிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா தோல்வி குறித்து கூறுகையில், 'இரண்டாவது ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை ஆட்டம் எங்களிடம் தான் உள்ளது என நினைத்தேன். துரதிர்ஷ்டவசமான டிம் டேவிட்டின் ரன் அவுட்.. அது நடக்கும் வரை எங்கள் கையில் போட்டி உள்ளது என நம்பிக் கொண்டிருந்தோம். எல்லாமே சரியாக செய்தோம். எனினும் சொதப்பிவிட்டது.
ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இந்த சீசனில் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக எங்கள் தரப்பில் இருந்து அனைத்தையும் செய்துவிட்டோம், ஆனால் சூழல் அமையவில்லை.
பந்துவீச்சில் நாங்கள் நிலையான தன்மையில் இல்லை என்று நினைக்கிறேன். அதனை மாற்ற வேண்டும். நடப்பு தொடரில் ஏதேனும் வாய்ப்பு இருந்தால் புதிய வீரர்களையும் பயன்படுத்தி பார்ப்போம்' என தெரிவித்துள்ளார்.