சமூக ஊடக தளங்களிலிருந்து விலக வேண்டும் - இந்திய வீரர்களிடம் வலியுறுத்திய ரோஹித் ஷர்மா
டி20 உலகக்கிண்ணத்திற்கு முன்பு வெளி உலகத் தொந்தரவுகளை தவிர்க்குமாறு, இந்திய வீரர்களை ரோஹித் ஷர்மா வலியுறுத்தியுள்ளார்.
உலகக்கிண்ணம்
பிப்ரவரி 7ஆம் திகதி டி20 உலகக்கிண்ணத் தொடர் தொடங்க உள்ளது. இந்தியா, இலங்கையில் இப்போட்டித் தொடர் நடைபெற உள்ளது.
சொந்த மண்ணில் இந்திய அணி விளையாட உள்ளதால், தொடரின் பெரும் அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஒரு திட்டவட்டமான வழிகாட்டி நெறியை ரோஹித் ஷர்மா வழங்கியுள்ளார்.
அவர் 2023 ஒருநாள் உலகக்கிண்ணம் மற்றும் 2024 டி20 உலகக்கிண்ணத்தில் இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்திய அனுபவம் மூலம், உச்சக்கட்ட செயல்திறனைப் பராமரிக்க Digital Detox-யின் அவசியத்தை ரோஹித் ஷர்மா வலியுறுத்தியுள்ளார்.
ரோஹித் ஷர்மா அறிவுரை
ரோஹித் ஷர்மா (Rohit Sharma) நேர்காணல் ஒன்றில், "முக்கியமான போட்டிகளின்போது வீரர்களை அடிக்கடி திசைதிருப்பும் வெளி உலகத் தொந்தரவுகளை தவிர்ப்பதற்காக, சமூக ஊடக தளங்களில் இருந்து முழுமையாக விலகி இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருப்பதுதான் சிறந்தது.
நான் இப்போதும் அதிலிருந்து விலகியே இருக்கிறேன். இது நடந்தது, அது நடந்தது என்று வெளியில் இருந்து எனக்கு செய்திகள் வருகின்றன. அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
2023 உலகக்கிண்ணத்தின் போதும் நான் இதைத்தான் செய்தேன். வேறு யாரிடமாவது சொல்வதற்கு முன்பு, நான் அதை நானே கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தேன்" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |