சதமடித்து புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தமது 7வது சதத்தை பதிவு செய்த இந்திய வீரர் ரோகித் சர்மா, இதுவரை யாரும் செய்யாத சாதனையையும் செய்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் தொடங்கியுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் துடுப்பாட்டம் தெரிவு செய்தது.
சுப்மன் கில், புஜாரா, விராட் கோஹ்லி ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தாலும், அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில், இது அவரது 7வது சதமாகும். இந்த சதத்தின் மூலம், இதுவரை யாரும் செய்யாத சாதனையையும் செய்துள்ளார் ரோகித்.
ஏற்கனவே இங்கிலாந்திற்கெதிராக ஒருநாள், இருபது ஓவர் போட்டிகளில் சதமடித்துள்ள ரோகித், இன்று இங்கிலாந்திற்கெதிராக டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்துள்ளார். இதன்மூலம் நான்கு அணிகளுக்கு எதிராக, கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மட்டிலும் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ரோகித் சர்மா ஏற்கனவே இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுடன், மூன்று ஃபார்மட்டிலும் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.