ரோகித்துக்கு பதில் இஷானை களமிறக்கியது யார் எடுத்த முடிவு? நடந்ததை வெளிப்படையாக கூறிய இந்திய அணியின் பயிற்சியாளர்
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சம்மதத்துடன் தான் இஷான் கிஷான் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
கட்டாய வெற்றிப்பெற வேண்டிய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதனால், இந்திய அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் நுழையும் வாய்ப்பு கடினமாகியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக கே.எல்.ராகுலுடன் ஓபனிங் பேட்ஸ்மேனாக இஷான் கிஷான் களமிறங்கியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
பலர் நியூசிலாந்து எதிரான இந்தியாவின் தோல்விக்கு ரோகித்துக்கு பதில் இஷான் கிஷானை ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கியது தான் காரணம் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இஷான் கிஷானை ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்குவது குறித்த முடிவை யார் எடுத்தார்கள் என்பதை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது, இந்திய அணியின் பேட்டிங்கில் நடுத்தர வரிசையில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், கிஷானை ஓபனிங் களமிறங்க முடிவெடுக்கப்பட்டது.
என்ன நடந்தது என்றால், நியூசிலாந்து உடனான போட்டிக்கு முந்தைய நாள் இரவு சூர்யகுமாருக்கு கயாம் ஏற்பட்டது, அவர் விளையாட முழு உடல்தகுதியுடன் இல்லை.
எனவே, இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டார், அவர் ஓபனிங் பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடிவுள்ளார் என அனைவருக்கும் தெரியும்.
எனவே, அவரை ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கும் முடிவு, ஒட்டுமொத்த அணி நிர்வாகம் உட்கார்ந்து கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு.
அணி நிர்வாகத்தில் ரோகித் சர்மாவும் ஒருவர், அவரும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டார் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.