ரோமப் பேரரசு வரலாற்று காலம்: இங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள்
இங்கிலாந்தில் லிங்கன்ஷயரில் நடந்த அகழ்வாய்வில் இரண்டு இரும்புக் கால எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த எலும்புக் கூடுகள், நேவன்பை என்னும் இடத்துக்கருகில் தனித் தனி அகழ்வாய்வுப் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டன. ஒரு தண்ணீர் குழாய்த் திட்டத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளின் போது இந்த எலும்புக் கூடுகள் கிடைத்தன.
இதனோடு சிறு கட்டடங்கள் மற்றும் பானைகளின் உடைந்த பாகங்களும் கிடைத்திருக்கின்றன.
இந்த கண்டுபிடிப்புகள் இந்த பகுதியின் கடந்த காலத்தைக் குறித்து, அகழ்வாய்வாளர்கள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள உதவும் என ஆங்லியன் வாட்டர் நிறுவனத்தின் தொல்பொருட்கள் மதிப்பீட்டாளரான ஜோ எவரிட் கூறினார்.
இரும்புக் காலம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன் 800 (கி.மு) முதல் ரோம் நகரத்தின் படையெடுப்பு நடந்த கி.பி 43 வரையிலான காலத்தை உள்ளடக்கியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
"நேவன்பை பகுதியில் இரும்புக் கால சமூகங்கள் வாழ்ந்தனர் என்பதை அறிவோம். அதோடு நன்கு வரையறுக்கப்பட்ட ரோமானியர்களின் வரலாறும் இங்கு இருக்கிறது. இது போன்ற கண்டுபிடிப்புகள், நம் முந்தைய வரலாற்றைக் குறித்து நிறைய விஷயங்களைக் கூறும். இரும்புக் காலச் சமூகத்தினர் ஒவ்வொரு நாளையும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைக் கூறும்" என்றார் எவரிட்.
இந்த எச்சங்களில் நாட்டிங்ஹாம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள் தங்களின் பகுப்பாய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏங்லின் வாட்டர் நிறுவனத்தின் தண்ணீர் குழாய்த் திட்டத்தின் முதல் பகுதி லிங்கன் & க்ராந்தம் நகரங்களுக்கு இடையில் வரும் வசந்த காலத்தில் தொடங்க இருக்கிறது. இதற்கு முன்பு இந்தப் பகுதிகளைத் தோண்டிய போது, பல ரோமப் பேரரசு காலத்தின் நாணயங்கள் கிடைத்தன.
அந்தக் காலகட்டங்களிலேயே, இந்த பகுதிகளில் மெக்டொனால்ட்ஸ் போன்ற துரித உணவகங்கள் இருந்தது என்கிற கருத்துக்கு வலுசேர்க்கும் விதத்தில் இந்த நாணயங்கள் இருக்கின்றன என அப்போது நிபுணர்கள் கூறினார்கள்.
இந்த பகுதிகளில் ரோமப் பேரரசின் சில கட்டட எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

