பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம்
இணையம் வாயிலாக தான் சந்தித்த பிரான்ஸ் அழகிப்பட்டம் பெற்ற பெண்ணைத் திருமணம் செய்வதற்காக பெல்ஜியம் நாட்டிலிருந்து 760 கிலோமீற்றர் தூரம் பயணித்து பிரான்ஸ் வந்தார் ஒருவர்.
பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக...
மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டியில் பங்கேற்றவரும், Miss Limousin பட்டம் பெற்றவருமான சோபி (Sophie Vouzelaud, 38), பாரீஸுக்கு தெற்கே உள்ள Saint-Julien என்னுமிடத்தில் வாழ்ந்துவருகிறார்.
இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 9ஆம் திகதி, தன் வீட்டு வாசலில் வந்து நின்ற மிக்கெல் (Michel, 76) என்பவரைக் கண்டு குழப்பமடைந்தார் சோபி.
அதாவது, பெல்ஜியம் நாட்டவரான மிக்கெல், கடந்த பல வாரங்களாக வாட்ஸ் ஆப்பில் தன்னை மிஸ் பிரான்ஸ் சோபி என அறிமுகம் செய்துகொண்ட பெண்ணொருவருடன் பழகிவந்துள்ளார்.
ஆக, இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என அந்தப் பெண் கூற, அதை நம்பி உண்மையான சோபி வீட்டு வாசலுக்கே வந்துவிட்டார் மிக்கெல்.
சோபி வீட்டு வாசலுக்கு வந்த மிக்கெலை அங்கிருந்த ஒருவர் நீங்கள் யார் என கேட்க, நான் தான் சோபியின் வருங்காலக் கணவர் என்று கூறியுள்ளார் மிக்கெல்.
பதிலுக்கு அந்த நபர், அப்படியா, நான் சோபியின் நிகழ்காலக் கணவர் என்று கூற, குழப்பமடைந்த மிக்கெல், நடந்த விடயங்களை விவரித்துள்ளார்.
சோபியை சந்திப்பதற்காக தான் 30,000 யூரோக்கள் செலவு செய்துள்ளதாக அவர் கூற, பிறகுதான் தான் மோசடியாளர்களை நம்பி ஏமாந்தது அவருக்கு புரிந்துள்ளது.
அவருக்கு ஆறுதல் கூறி, பொலிசாரிடம் புகாரளிக்குமாறு ஆலோசனை சொல்லி அனுப்பியிருக்கிறார்கள் சோபியும் அவரது கணவரும்.
நான் ஒரு முட்டாள் என தலையில் அடித்துக்கொண்டே ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளார் மிக்கெல்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |