சுவிஸில் 25 உயிர்களை காப்பாற்றிய தந்தையும் மகளும்
சுவிட்சர்லாந்தின் Fribourg மாநிலத்தில் மாட்டுக் கொட்டகை ஒன்று தீ விபத்தில் சிக்கிய நிலையில், ஒரு தந்தையும் மகளும் துணிந்து செய்த சம்பவம் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
Fribourg மாநிலத்தில் Châtel-St-Denis நகராட்சி பகுதியிலேயே வியாழக்கிழமை பகல் குறித்த தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. பகல் 8.30 மணியளவில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிசார், உடனடியாக சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதனிடையே, Châtel-St-Denis பகுதி தீயணைப்பு துறையும் Bulle பகுதி தீயணைப்பு துறையும் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்து தொடர்பில் எச்சரிக்கை மணி ஒலித்ததும், அந்த மாட்டுக் கொட்டகையில் அருகாமையில் மதுபான விடுதி நடத்திவரும் தந்தையும் மகளும் துரிதமாக செயல்பட்டு, அந்த மாட்டுக்கொட்டகையில் உள்ள 25 மாடுகளை எந்த காயங்களும் இன்றி காப்பாற்றியுள்ளனர்.
ஆனால் மாட்டுக்கொட்டகை மொத்தமாக சேதமடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்கு பதிந்துள்ளதுடன் தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமயோசிதமாக செயல்பட்டு மொத்த மாடுகளையும் காப்பாற்றிய தந்தையையும் மகளையும் காவல்துறையும் அப்பகுதி மக்களும் பாராட்டியுள்ளனர்.