உலக பணக்கார பெண்கள் பட்டியல் - முதல் முதலாக இடம் பிடித்த தமிழ்நாட்டு பூர்விக பெண்
ஹுருன் என்ற அமைப்பு உலகளவிலான பணக்கார பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின்படி, உலகளவில் 3,442 பில்லியனர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எலான் மஸ்க் முதலிடம்
இந்த பட்டியலில், 420 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் உலகளவில் எலான் மஸ்க் முதலிடம் வகிக்கிறார். உலகில் 400 பில்லியன் டொலர் சொத்து மதிப்புள்ள வைத்துள்ள ஒரே நபர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற்றுள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், 266 பில்லியன் டொலர்களுடன் 2 வது இடத்திலும், மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், 242 பில்லியன் டொலர்களுடன் 3 வது இடத்திலும் உள்ளனர்.
இதில், முதல் 10 இடங்களில் அமெரிக்காவை சேர்ந்த 9 பேர் இடம்பிடித்துள்ளனர். பிரான்ஸை சேர்ந்த ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் லூயி வுய்டன் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 7வது இடத்தில் உள்ளார்.
முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பில் 13% சரிவை சந்தித்தாலும், ரூ.8.6 லட்சம் கோடிகளுடன் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார்.
கெளதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி உயர்ந்து, ரூ. 8.4 லட்சம் கோடிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
ரோஷினி நாடார்
ரூ.3.5 லட்சம் கோடிகளுடன் HCL தலைவர் ரோஷினி நாடார் 3வது இடத்தில் உள்ளார். அதே வேளையில், உலக பணக்கார பெண்களின் பட்டியலில் ரோஷினி நாடார் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
இதன் மூலம், டாப் 10 உலக பணக்கார பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
வால்மார்ட் நிறுவனர் சாம் வால்டன் மகள் ஆலிஸ் வால்டன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சமீபத்தில் HCL நிறுவனர் ஷிவ் நாடார் தன் வசமிருந்த 50% பங்குகளில், 47% பங்குகளை தனது ஒரே மகளான ரோஷினி நாடாருக்கு வழங்கினார். ஷிவ் நாடார் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார்.
இவருக்கு 2010 ஆம் ஆண்டு ஷிகர் மல்ஹோத்ரா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.