லண்டன் பேருந்து சாரதிகள் அதிரடி முடிவு: பாதிப்புக்குள்ளாகும் முக்கிய பகுதிகள்
லண்டன் பேருந்து சாரதிகள் 48 மணி நேர வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தெற்கு மற்றும் மத்திய லண்டன் பகுதிகள் பாதிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.
லண்டனில் அரிவா நிறுவனத்தில் பணியாற்றும் பேருந்து சாரதிகள் ஊதிய உயர்வு கோரி திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் பேருந்து சேவையை முன்னெடுக்கும் அரிவா நிர்வாகம் முன்னெடுத்த பேச்சுவார்த்தையின் இறுதியில் ஊதிய உயர்வு வழங்க முன்வந்ததால் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது என கூறப்படுகிறது.
இருப்பினும், அரிவா நிர்வாகம் அளிப்பதாக கூறியுள்ள 1.5% ஊதிய உயர்வு தொடர்பில் பேருந்து சாரதிகள் வாக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர். மட்டுமின்றி, பெரும்பாலான ஊழியர்கள் குறித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்துள்ளதால், திட்டமிட்டபடி 48 மணி நேரம் வேலை நிறுத்தம் உறுதி என தெரிய வந்துள்ளது.
கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் 1.5% ஊதிய உயர்வு ஏற்புடையதாக இல்லை என்றே ஊழியர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர். பேருந்து சாரதிகளின் திடீர் வேலை நிறுத்தத்தால், குரோய்டன், நோர்வூட் மற்றும் தோர்ன்டன் ஹீத் ஆகிய இடங்களில் உள்ள வழித்தடங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
பேருந்து சேவை என்பது ஆதாயம் கொட்டும் தொழில், அதனால் ஊழியர்களுக்கு உரிய ஊதிய உயர்வை கட்டாயம் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
நிறுவனம் நியாயமான சலுகையை வழங்கும் வரை மற்றும் இந்த சர்ச்சை தீர்க்கப்படும் வரை அரிவா நிறுவனத்தில் பணியாற்றும் எங்கள் உறுப்பினர்கள் தொழிற்சங்கத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, அரிவா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், Croydon, Norwood மற்றும் Thornton Heath கேரேஜ்களில் இருந்து அரிவா பேருந்து சேவைகள், மார்ச் 28 திங்கட்கிழமை முதல் 48 மணிநேர வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.