சென்னையை மொத்தமாக சுருட்டி வெளியேற்றிய பெங்களூரு அணி
15வது ஐ.பி.எல் தொடரின் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது .இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அணித்தலைவர் டு பிளசிஸ் மற்றும் விராட் கோஹ்லி களமிறங்கினர்.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 62 ஓட்டங்கள் சேர்த்தனர். டு பிளஸ்சிஸ் 22 பந்துகளில் 38 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மேக்ஸ்வெல் 3 ஓட்டங்களில் (ரன் அவுட் ) தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்த ஓவரிலே விராட் கோஹ்லி 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மகிபல் லோம்ரோர், ரஜத் படிதார் இருவரும் நிலைத்து ஆடி ஓட்டங்களை சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 123 ஓட்டங்களாக இருந்தபோது ரஜத் படிதார் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மகிபால் லோம்ரோர் 42 ஓட்டங்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் 17 பந்துகளை சந்தித்து 26 ஓட்டங்கள் சேர்த்து அதிரடி காட்டினார்.
இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு173 ஓட்டங்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 174 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக டேவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கி சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 51 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ராபின் உத்தப்பா 1 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் .அதன்பின்னர் வந்த ராயுடு 10 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். மறுபுறம் அதிரடி காட்டிய டேவான் கான்வே 37 பந்துகளில் 56 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதற்கு அடுத்த ஓவரில் ஜடேஜா 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி சென்னை அணியை சரிவில் இருந்து காப்பாற்ற முயன்று அதிரடி காட்டினார். அவர் 34 ஓட்டங்களில் ஹர்சல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கடைசி 2 ஓவர்களில் 39 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அணித்தலைவர் டோனி களத்தில் இருந்தார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் டோனி 3 ஓட்டங்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் பெங்களூரு அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.