வெளிநாட்டுக்காக உளவு பார்த்த பிரித்தானிய கடற்படைவீரர் கைது: விவரங்கள்
A Royal Navy serviceman has been charged with spying for a foreign country: வெளிநாடொன்றிற்காக உளவு பார்த்ததாக, பிரித்தானிய கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
கடற்படைவீரர் கைது
இங்கிலாந்தின் பெட்ஃபோர்ட்ஷையரைச் சேர்ந்த டெடி யங் (Teddy Young, 24) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளவர் ஆவார்.

2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் 2025ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் இடையில், தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு முரணாக, பாதுகாக்கப்பட்ட ரகசிய தகவலை வெளியிடும் குற்றத்தைச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், தேசியப் பாதுகாப்புச் சட்டத்துக்கு முரணாக, பிரித்தானியாவின் பாதுகாப்பு அல்லது நலன்களுக்குப் பாதகமானது என்று தனக்குத் தெரிந்திருந்தும் அல்லது தனக்குத் தெரியவந்த விடயங்கள் பிரித்தானியாவின் பாதுகாப்பு அல்லது நலன்களுக்குப் பாதகமானது என அறியும் நிலையிலிருந்தும், வெளிநாடொன்றிற்கு பயனளிக்கும் நோக்கில், பாதுகாக்கப்பட்ட தகவல்களைப் பெற்றுள்ளார், நகலெடுத்தார், பதிவுசெய்துள்ளார் அல்லது தன்னிடம் வைத்துக் கொண்டார், என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் எந்த நாட்டுக்காக உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என பொலிஸ் அறிக்கையில் கூறப்படாவிட்டாலும், அது, ரஷ்யா என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாயன்று கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் அடைக்கப்பட்ட டெடி யங், இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.