மோசமான குற்றவாளியுடன் மற்றொரு இளவரசருக்கும் தொடர்பு: பகீர் கிளப்பும் இளம்பெண்...
இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் மோசமான குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருந்த விடயம் ராஜ குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்த நிலையில், ஆண்ட்ரூ மீது குற்றம் சாட்டிய பெண் மற்றொரு இளவரசர் மீதும் குற்றம் சாட்டியுள்ள விடயம் வெளியில் வந்துள்ளதால் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.
ராஜ குடும்பத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்திய இளவரசர்
பிரித்தானிய மன்னரான சார்லசுடைய தம்பி இளவரசர் ஆண்ட்ரூ. ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பல பிரபலங்களுக்கு விருந்தாக்கிய அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன்.
இந்த எப்ஸ்டீன் தனது மாளிகையில் செல்வந்தர்களுக்கும், பிரபலங்களுக்கும் விருந்தளிப்பது வழக்கம். அப்படிப்பட்ட விருந்துகளில் கலந்துகொள்பவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பல இளம்பெண்களையும் சிறுமிகளையும் ஏற்பாடு செய்திருந்தார் எப்ஸ்டீன்.
அவர்களில் ஒருவர் விரிஜினியா என்னும் இளம்பெண். விர்ஜினியாவுக்கு 17 வயது இருக்கும்போது, அவர் எப்ஸ்டீனுடைய மாளிகைக்கு வந்திருந்த பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவுடன் உடல் ரீதியான உறவு கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
மூன்று இடங்களில் வைத்து ஆண்ட்ரூ தன்னுடன் உறவு வைத்துக்கொண்டதாக விர்ஜினியா குற்றம் சாட்ட, ராஜ குடும்பத்துக்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டது.
குட்டு வெளியானது...
இந்த எப்ஸ்டீன் வழக்கம்போல இளம்பெண்கள், சிறுமிகளிடம் அத்துமீறிக்கொண்டிருக்க, 14 வயது சிறுமி ஒருத்தி தன்னிடம் எப்ஸ்டீன் அத்துமீறியது குறித்து தன் பெற்றோரிடம் கூற, அவர்கள் பொலிசாரிடம் புகாரளிக்க, எப்ஸ்டீனுடைய அராஜகங்கள் வெளியே வரத்துவங்கின.
இந்த வழக்கு தொடர்பாக பொலிசார் விர்ஜினியாவை தொடர்புகொள்ள, பின்னர் தன்னை சீரழித்த எப்ஸ்டீன் மற்றும் தனக்கு வேலை தருவதாகக் கூறி ஏமாற்றி தன்னைக் கடத்திய எப்ஸ்டீனுடைய காதலியான கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்தார்.
AFP
சிக்கிய பிரபலங்கள்
இந்த வழக்கில் பல பிரபலங்களின் பெயர்கள் உள்ள நிலையில், நீண்ட காலமாக அவர்களின் பெயர்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. ஆனால், கடந்த மாதம், அதாவது, டிசம்பர் மாத இறுதியில், வழக்கில் தொடர்புடைய நூற்றுக்கணக்கானவர்களின் பெயர்களை வெளியிட நீதிபதி Loretta Preska என்பவர் அனுமதியளித்தார்.
அதைத்தொடர்ந்து, அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், நடிகைகள் கேட் ப்ளாஞ்சட், கேமரான் டயஸ், மொடலான நவோமி கேம்பல், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளிண்டன், டொனால்ட் ட்ரம்ப், டைட்டானிக் புகழ் நடிகர் லியனார்டோ டிகேப்ரியோ, பாப் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், நடிகர்கள் கெவின் ஸ்பேசி, புரூஸ் வில்லிஸ் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ ஆகிய பெயர்கள் வெளியாகி பரபரப்பை உருவாகி வருகின்றன.
மற்றொரு இளவரசருக்கும் தொடர்பு
இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களில், விர்ஜினியா மற்றொரு இளவரசருடனும் உடல் ரீதியான உறவு கொள்ள வற்புறுத்தப்பட்டது குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தான் இளவரசர் ஆண்ட்ரூ மட்டுமின்றி வேறொரு இளவரசருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ள விர்ஜினியா, ஆனால், அவரது பெயர் தனக்குத் தெரியவில்லை என்றும், அவர் எந்த நாட்டவர் என்பதும் தனக்குத் தெரியவில்லை என்றும், அவர் தனக்குத் தெரியாத ஒரு மொழியில் பேசினார் என்றும் கூறியுள்ளார்.
இதனால், பிரித்தானிய ராஜ குடும்பம் மட்டுமல்ல, வேறொரு ராஜ குடும்பமும் அவமானத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |