உயிருடன் இருக்கும்போதே தனது இறுதிச்சடங்குக்காக இளவரசர் பிலிப் செய்த ஏற்பாடு
பிரித்தானிய மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப், தான் உயிருடன் இருக்கும்போதே தனது இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
குறிப்பாக, தான் இறந்தபின், தனது உடல் வைக்கப்படும் பெட்டியை சுமந்து செல்வதற்காக தனது Land Rover வாகனத்தை வடிவமைத்துள்ளார் அவர். அடர் பச்சை வண்ணத்தில் காணப்படும் அந்த Land Rover வாகனம்தான், நாளை இளவரசர் பிலிப்பின் உடலை சுமந்து செல்ல இருக்கிறது.
புதுமையையும் வடிவமைத்தலையும் விரும்பும் இளவரசர் பிலிப்பின் ஆர்வத்துக்கு சாட்சியமாக நிற்கிறது அந்த Land Rover. 16 ஆண்டுகளுக்கு முன்பே அந்த வாகனத்தை வடிவமைக்க உதவினார் பிலிப்.
இளவரசர் பிலிப்பின் வேண்டுகோளின்படி, சவப்பெட்டி ஒன்றை சுமக்கும் வகையில் அந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு, தனக்கு 82 வயதானபோது, இந்த வாகனத்தில் மாற்றங்கள் செய்யத் தொடங்கினார் அவர். பிலிப்பின் விருப்பத்தின் பேரில் இராணுவ வாகனங்களுக்கு இணையான அடர் பச்சை வண்ணம் அந்த வாகனத்துக்கு பூசப்பட்டது.
2019ஆம் ஆண்டு, தனக்கு 98 வயதானபோது, அந்த வாகனத்தின் பின்பகுதியில், சவப்பெட்டி ஒன்றை வைக்கும் வகையில் அதை வடிவமைத்தார் பிலிப். அவரது விருப்பத்தின்படியே, அவரே வடிவமைத்த அந்த Land Rover வாகனத்தில்தான், இளவரசர் பிலிப்பின் உடல் இறுதிச்சடங்கிற்காக கொண்டு செல்லப்பட உள்ளது.