குட்டி இளவரசரின் பொம்மைகளை நாசம் செய்த நரிகள்; வேட்டைக்காரனை வைத்து சுட்டுக்குவித்த அரச குடும்பம்
பிரித்தானிய அரச குடும்பத்தினர் சிறப்பு வேட்டைக்காரர் ஒருவரை வேலைக்கு அமர்த்தி பல நரிகளை சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைசிறந்த நரி வேட்டைக்காரர் ஒருவர், ஒருமுறை இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டனின் மகன் குட்டி இளவரசர் ஜார்ஜின் பொம்மைகளை நாசம் செய்த நரிகளை சுட்டுக்கொள்வதற்காகவே அரச குடும்பத்தால் பணியமர்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
63 வயதாகும் ப்ரூஸ் லிண்ட்சே-ஸ்மித் எனும் வேட்டைக்காரர் அவரே இதனை ஊடகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
இளவரசர் ஜார்ஜின் பொம்மைகளை நாசம் செய்த நரிகள்
பிரித்தானியாவில் லட்சக்கணக்கில் நரிகள் வாழும் நிலையில், சில நரிகள் அரண்மனை தோட்டத்திற்கும் நுழைந்து, இளவரசர் ஜார்ஜின் பொம்மைகளை கடித்துக் குதறி அதன்மீது மலம் கழித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், நரிகள் அடிக்கடி அங்கு வந்து தொந்தரவு செய்துவருவதாகவும், மன்னர் சார்லஸின் நாய்களை ஒருமுறை கடிக்க துரத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அரச குடும்பம் தன்னை அழைத்து நரிகளை வேட்டையாடுமாறு கேட்டுக்கொண்டதாக்க அவர் தெரிவித்தார்.
இதுவரை 10 முறை வேட்டைக்கு சென்றதாகவும், ஒவ்வொரு முறையும் குறைந்தது 5 நரிகளை வேட்டையாடியதாகவும் ப்ரூஸ் கூறியுள்ளார்.
குழந்தைகள் விளையாடும் இடத்தில் நரிகள் இருப்பதை அரச குடும்பம் விரும்பவில்லை என்றும் அவர்களையும் குற்றம் சொல்லமுடியாது என்றும் அவர் கூறினார்.
இந்த வேலைக்காக அவர், அகச்சிவப்பு மற்றும் வெப்ப தொலைநோக்கி காட்சிகள் கொண்ட சைலன்சர் பொருத்தப்பட்ட பாயிண்ட் 22 நீண்ட துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.