சன்னி லியோன் பெயரில் மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை.., அதிகாரிகள் அதிர்ச்சி
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடிகை சன்னி லியோன் பெயரில் மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை டெபாசிட் செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
சன்னி லியோன் பெயரில் பணம்
பெண்களின் முன்னேற்றத்திற்காக மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் திருமணமான பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது.
அதேபோல, சத்தீஸ்கரில் பாஜக அரசின் மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் திருமணமான பெண்கள் தங்கள் கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 பெறுகிறார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெயரில் யாரோ உதவித்தொகை பெற்று வந்துள்ளனர். அதாவது, சன்னி லியோன் பெயரில் போலியான வங்கிக்கணக்கு தொடங்கி அரசின் திட்டத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்தக் கணக்கைத் திறந்து இயக்கியவர் வீரேந்திர ஜோஷி என அடையாளம் காணப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தகுதியான பயனாளிகளின் சரிபார்ப்புக்கு பொறுப்பான அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் உள்ள தலூர் கிராமத்தில் இந்த மோசடி நடந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி வங்கிக் கணக்கை பறிமுதல் செய்ய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு மாவட்ட ஆட்சியர் ஹரீஸ் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, இந்த விவகாரம் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 50 சதவீத பயனாளிகள் போலியானவர்கள் தான் என்று மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
இவரின் கருத்துக்கு துணை முதலமைச்சர் அருண் சாவோ, " கடந்த ஆட்சிக் காலத்தில் காங்கிரஸால் வழங்க முடியாத மாதாந்திர உதவிகளை இப்போது வழங்குவதால் காங்கிரஸ் வேதனையில் இருக்கிறது" என்று பதில் அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |