மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரை மானியம்., மத்திய அரசின் புதிய PM E-DRIVE திட்டம்
இந்திய மக்களிடம் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், PM E-DRIVE Scheme என்ற புதிய மானிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம், மின்சார இரு சக்கர வாகனங்கள் 10 ஆயிரம் ரூபாய் வரை மலிவானதாக மாறும்.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் HD குமாரசாமி, விரைவில் தொடங்கவுள்ள பி.எம். இ-டிரைவ் திட்டத்தின் கீழ் மின்சார இருசக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு முதல் ஆண்டில் ரூ.10,000 வரை மானியம் கிடைக்கும் என அறிவித்துள்ளார்.
இந்த மானியம் வாகனத்தின் பேட்டரி சக்தியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு கிலோவாட் மணி (kWh)க்கு ரூ.5,000 வழங்கப்படும், ஆனால் முதல் ஆண்டில் அதிகபட்சமாக ரூ.10,000க்கு அதிகமாக வழங்கப்படாது.
இரண்டாவது ஆண்டில், மானியம் குறைந்து, kWhக்கு ரூ.2,500 மட்டுமே வழங்கப்படும், அதிகபட்சமாக ரூ.5,000 கிடைக்கும்.
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் நோக்கில், ரூ.10,900 கோடி நிதியுடன் PM E-DRIVE திட்டம் மற்றும் ரூ.3,435 கோடி நிதியுடன் PM-eBus Sewa-Payment Security Mechanism (PSM) Scheme ஆகிய இரண்டு முக்கிய திட்டங்களை இந்திய அரசு முன்னெடுத்து வருகிறது.
இ-ரிக்ஷா வாங்குபவர்களுக்கு முதல் ஆண்டில் ரூ.25,000 மற்றும் இரண்டாம் ஆண்டில் ரூ.12,500 மானியம் கிடைக்கும். சரக்கு மூன்று சக்கர வாகனம் வாங்குபவர்கள் (L5 வகை) முதல் ஆண்டில் ரூ.50,000 மற்றும் இரண்டாவது ஆண்டில் ரூ.25,000 வரை பயனடைவார்கள்.
இந்த மானியங்களைப் பெற, வாங்குபவர்கள் ஆதார் வழியாக தங்கள் வாங்குதலை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் டீலரிடமிருந்து கையொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் ஒரு செல்ஃபியை பிஎம் இ-டிரைவ் போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் மின்சார இருசக்கர, மூவுசக்கர வாகனங்கள், மின்சார ஆம்புலன்ஸ் மற்றும் மின்சார லொறிகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு மானியமாக ரூ.3,679 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது 24.79 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள், 3.16 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள், மற்றும் 14,028 மின்சார பஸ்கள் விற்பனையை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10% இருசக்கர வாகனங்களின் விற்பனை மற்றும் 15% மூன்று சக்கர வாகன விற்பனை மின்சார வாகனங்களாக இருக்கும் என அரசு கணிக்கின்றது.
PM-eBus Sewa-Payment Security Mechanism மூலம் 38,000 மின்சார பஸ்களை அறிமுகப்படுத்துவதற்காக ரூ.3,435 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
PM E-DRIVE Scheme, Electric Vehicles, Subsidy On Electric Two-Wheelers, PM-eBus Sewa-Payment Security Mechanism