மாதம் ரூ.13,000 சம்பளம்: காதலிக்கு 4 BHK வீடு பரிசு! அரசு அலுவலகத்தில் ரூ.21 கோடி மோசடி
மகாராஷ்டிரா அரசு விளையாட்டு வளாகத்தில் பணியாற்றிய கணினி இயக்குநர் ரூ.21 கோடி கையாடல் செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 21 கோடி கையாடல் மோசடி
ரூ.13,000 மாத வருமானத்தில் மகாராஷ்டிராவின் அரசு விளையாட்டு வளாகத்தில் கணினி இயக்குனராக பணியாற்றி வந்த இளைஞர் ரூ.21 கோடி என்ற மிகப்பெரிய தொகையை கையாடல் செய்து, சொகுசு கார்கள் மற்றும் தனது காதலிக்கு 4 BHK வீட்டை வாங்கி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்ரபதி சம்பாஜிநகரில்(Chhatrapati Sambhajinagar) உள்ள பிராந்திய விளையாட்டு வளாகத்தில் ஒப்பந்த ஊழியராக இருந்த ஹர்ஷல் குமார் க்ஷிர்சாகர்(Harshal Kumar Kshirsagar) இந்த மிகப்பெரிய மோசடியை செய்து இருப்பதோடு தற்போது தலைமறைவாக உள்ளார்.
ஹர்ஷலை ஆதரித்ததற்காக அவரது சக ஊழியர் யசோதா ஷெட்டி மற்றும் அவரது கணவர் பி.கே. ஜீவன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
23 வயதான ஹர்ஷல் பணத்தை கையாடல் செய்ய பின்பற்றிய திட்டமிடல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிர்ச்சிக்குள்ளாக்கும் கையாடல் திட்டமிடல்
அதாவது, ஹர்ஷல் முதலில் விளையாட்டு வளாகத்தின் கணக்கில் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை மாற்றும்படி வங்கிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அத்துடன் விளையாட்டு வளாகத்தின் உண்மையான கணக்கின் முகவரியை ஒத்த, ஒரே ஒரு எழுத்து மட்டும் மாற்றப்பட்ட புதிய மின்னஞ்சல் கணக்கையும் தொடங்கி அதை வங்கி கணக்குடன் இணைத்துள்ளார்.
இதையடுத்து ஹர்ஷல் OTP கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்குத் தேவையான பிற தகவல்களை பயன்படுத்தி மோசடியில் இறங்கியுள்ளார்.
மேலும் அடுத்த கட்டமாக, ஹர்ஷல் பிராந்திய விளையாட்டு வளாக குழுவின் வங்கிக் கணக்கில் இணைய வங்கியை செயல்படுத்தியுள்ளார்.
இதன்மூலம் இந்த ஆண்டு ஜூலை 1 முதல் டிசம்பர் 7 வரை, அவர் ரூ.21.6 கோடியை 13 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாக கூறப்படுகிறது.
காதலிக்கு 4 BHK வீடு பரிசு
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழங்கிய தகவலில், இந்த பணம் ரூ.1.2 கோடி மதிப்புள்ள BMW கார், ரூ.1.3 கோடி செலவான SUV மற்றும் ரூ.32 லட்சம் மதிப்புள்ள BMW பைக் வாங்க பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஹர்ஷல் தனது காதலிக்கு சத்ரபதி சம்பாஜிநகர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு பளபளப்பான 4 BHK வீட்டை பரிசாக வழங்கியுள்ளார்.
அத்துடன் அவர் தனது காதலிக்கு வைரம் நகையையும் ஆர்டர் செய்திருந்தார் என்று விசாரணை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
பணத்தை கையாடல் செய்ய பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுடன் தொடர்புடைய ஆவணங்களை தற்போது சேகரித்து வருவதால், இந்த பெரிய மோசடியில் மேலும் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |