சிக்கலில் ரூ.40,000 கோடி மதிப்புள்ள அரண்மனை: நீதிமன்றம் அளித்த 90 நாள் அவகாசம்
இந்தியாவின் செல்வ செழிப்புமிக்க அரச குடும்பங்களில் ஒன்றான சிந்தியா குடும்பத்திற்குச் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான தகராறு நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது.
சிந்தியா குடும்பம்
சிந்தியா குடும்பத்தின் இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ 40,000 கோடி என்றே கூறப்படுகிறது. சிந்தியா குடும்பத்திற்குள் நீண்டகாலமாக நிலவி வந்த சொத்து மோதல் தீர்வுக்கு நெருங்கி வருகிறது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது மூன்று அத்தைகளான உஷா ராஜே ராணா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் முன்னாள் மத்தியப் பிரதேச அமைச்சர் யசோதரா ராஜே ஆகியோருக்கு இடையேயான சாத்தியமான சமரசத்திற்கு குவாலியரில் உள்ள மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் 90 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.
குவாலியர் உயர் நீதிமன்றம் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது அத்தைகள் மூவர் இடையே 90 நாட்களுக்குள் பரம்பரை தகராறை சுமுகமாக தீர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மகாராஜா ஜிவாஜிராவ் சிந்தியாவின் மரணத்திற்குப் பிறகு இந்த சர்ச்சை தொடங்கியது. ஜோதிராதித்யாவின் அத்தைகளான வசுந்தரா ராஜே, யசோதரா ராஜே மற்றும் உஷா ராஜே ஆகியோர் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி தங்கள் தந்தையின் சொத்தில் சம பங்கைக் கேட்கிறார்கள்.
ஆனால், ஜோதிராதித்யா, மூத்த மகனுக்கு அரச சொத்துரிமையை தக்க வைத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்று வாதிடுகிறார். குவாலியரில் உள்ள ஜெய் விலாஸ் அரண்மனை 12.40 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.
ஜெய் விலாஸ் அரண்மனை
இதன் மதிப்பு ரூ.4,000 கோடிக்கு மேல். 400 அறைகள் கொண்ட இந்த அரண்மனையில் சுமார் 560 கிலோகிராம் தூய உருகிய தங்கத்தைப் பயன்படுத்தி அலங்கரித்துள்ளனர். மேலும் 3,500 கிலோ எடையுள்ள சரவிளக்குகள் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த அரண்மனையில் உள்ளன.
குவாலியரில் உள்ள ஜெய் விலாஸ் அரண்மனையின் கட்டுமானம் 1874 ஆம் ஆண்டு சிந்தியா வம்சத்தின் மன்னரான ஜெயஜி ராவ் சிந்தியாவால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த அரண்மனையை பிரெஞ்சு கட்டிடக் கலைஞர் சர் மைக்கேல் ஃபிலோஸ் வடிவமைத்தார். அரண்மனையின் முதல் தளம் டஸ்கன் பாணியிலும், இரண்டாவது தளம் இத்தாலிய-டோரிக் பாணியிலும், மூன்றாவது தளம் கொரிந்திய பாணியிலும் உள்ளது.
அரண்மனைக்குள் தர்பார் மண்டபத்தில், உலகின் மிகப்பெரிய சரவிளக்கு அமைந்துள்ளது, இதன் எடை 3,500 கிலோவுக்கும் அதிகமாகும். ஜெய் விலாஸ் அரண்மனையில் தற்போது சிந்தியா அரச குடும்பத்தின் வரலாற்றைக் காட்சிப்படுத்த 35 அறைகளைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |